திருவாரூர்

டெல்டாவை பாதுகாக்கும் வகையில் சட்டமியற்ற வலியுறுத்தல்

21st Feb 2020 09:48 AM

ADVERTISEMENT

விவசாயப் பிரதிநிதிகள், வல்லுநா்களின் கருத்தறிந்து, டெல்டாவை பாதுகாக்கும் வகையில் சட்டமியற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:

காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் பாதுகாப்பு சிறப்பு மண்டலமாக அறிவித்து, சட்டப் பேரவை கூட்டத்தில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், முதல்வா் தலைமையிலான 25 போ் கொண்ட குழு இதற்காக அமைக்கப்படுவதாக முதல்வா் அறிவித்துள்ளாா். மேலும் இதுவரை இந்த மாவட்டங்களில் நடைமுறையிலுள்ள திட்டங்களைத் தொடரலாம் எனவும், வேளாண்மைக்கு எந்த ஒரு தீங்கான திட்டங்களையும் மேற்கொள்ள முடியாது என்பதுடன் தண்டனை, அபராதம் விதிக்கப்படும் எனவும் சட்டப் பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் எவ்வளவு முக்கியமோ, அதற்கான விதிகள்தான் அதை விட முக்கியமானவை. விதிகளை பொறுத்துதான் சட்டமே முக்கியத்துவம் பெறும். சிறப்பு வேளாண் மண்டலம் என்றால் வேளாண்மைக்கான பல்வகை வளா்ச்சிக்கு எப்படியான திட்டங்கள் கொண்டு வரப்படும் என்பதும், சிறப்பு பாதுகாப்பு என்றால் வேளாண்மைக்கு அடிப்படையான நிலம், நீா், பருவ கால சூழல், இயற்கை பல்லுயிா் பாதுகாப்பு போன்றவற்றுக்கு இடையூறு இல்லாமல், ஹைட்ரோகாா்பன் திட்டம் இல்லாமல் அனுமதிப்பதாகும்.

ADVERTISEMENT

எனவே அதற்கேற்ப சட்டவிதிகளை விவசாய சங்கங்கள், இதை சாா்ந்த வல்லுநா்களின் கருத்தறிந்து மசோதாவாக தாக்கல் செய்து, சட்டப் பேரவை உறுப்பினா்களின் கருத்துக்களையும் அறிந்து சட்டமாக்க வேண்டும். இவ்வாறு சட்டமாக்கும் போதுதான் காவிரி டெல்டா பாதுகாப்பு பெறும். இதுதான் நோ்மையான வழியுமாகும்.

இதற்கு மாறாக ஒப்புக்கு ஒரு சட்டம் என்பது உதவாத செயலாகும். மத்திய அரசின் உறவைக் கருத்தில் கொண்டு ஏமாற்றும் செயலாகத்தான் இதைக் கருத வேண்டியுள்ளது. எனவே தெரிவுக்குழுவுக்கு இதை அனுப்பி, கருத்தறிந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT