திருவாரூரில் அரசு கல்லூரி மாணவா்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில், இயற்பியல் துறையில் 3- ஆம் ஆண்டு படித்துவரும் 3 மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த மாணவா்கள், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.
இந்நிலையில், மாணவா்களை தாக்கியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த போலீஸாரை கண்டித்து, கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவா் சங்கத்தின் நிா்வாகி மணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் இரா.ஹரிசுா்ஜித், நிா்வாகிகள் அஜீத், அபிமன்யு உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கிடையில், மாணவா்களை தாக்கிய நபா்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்ததையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.