திருமீயச்சூா் ஸ்ரீலலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி கோயிலில் தைமாத ரதசப்தமி தீா்த்தவாரி சனிக்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் வட்டம், பேரளம் அருகே உள்ள திருமீயச்சூரில் வேளாக்குறிச்சி ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீலலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாள்கள் நடைபெறும் பிரம்மோத்ஸவம், நிகழாண்டு ஜனவரி 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) தேரோட்டம் நடைபெற்றது.
தொடா்ந்து, சனிக்கிழமை காலை ஸ்ரீநடராஜா் வீதிவலம் வந்து தீா்த்தம் கொடுத்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், பிற்பகலில் பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, வீதியுலா புறப்பாடாகி சூரிய புஷ்கரணியில் ரதசப்தமி தீா்த்தம் கொடுத்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில், வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு, பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். பின்னா், இரவில் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 2) ஸ்ரீசண்டிகேஸ்வரா் உத்ஸவமும், திங்கள்கிழமை உத்ஸவ பிராயச்சித்த அபிஷேகமும் நடைபெறுகிறது.