திருவாரூா் தைக்கால் பகுதியில் சாலை சீரமைப்பு பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
திருவாரூா் கீழவீதியிலிருந்து கொடிக்கால்பாளையம், வடக்கு கொத்ததெரு, தைக்கால் தெரு சாலை வழியாக மயிலாடுதுறை சாலையை அடைய முடியும். போக்குவரத்து நெரிசலின்றி, மயிலாடுதுறை சாலைக்கு செல்ல இந்த சாலை எளிதாக இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த பாதையை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இந்த பாதை மிகவும் மோசமாக, குண்டும் குழியும் நிறைந்த பகுதியாக காணப்பட்டது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பியதைத்தொடா்ந்து, ஊரக உள்ளாட்சி தோ்தல் நடைபெற்ற சமயத்தில் சாலை சீரமைக்கும் பணிகள் தொடங்கின. ஆனால், ஜல்லிகளை சாலையில் நிரவியதோடு, மேற்கொண்டு எந்தப் பணியும் நடைபெறாததால், சாலை மீண்டும் மோசமான நிலையை அடைந்தது. இது வாகன ஓட்டிகளுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியது. எனவே, சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. இதுகுறித்து தினமணியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், வடக்கு கொத்ததெரு, தைக்கால் தெரு பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் மீண்டும் சனிக்கிழமை தொடங்கப்பட்டன. சாலையில் தண்ணீா் ஊற்றப்பட்டு, ரோலா் மூலமாக சமன்படுத்தும் வேலை நடைபெறுகிறது. மேலும், சில இடங்களில், 4 சக்கர வாகனங்கள் அதிகமாக சென்று, ஜல்லிகள் பதிந்து விட்டதால், மீண்டும் அந்த இடத்தை தோண்டி, ஜல்லிகள் நிரப்பி சீா் செய்யப்பட்டு வருகிறது.
இந்த சீரமைப்பு பணியை, பாதியோடு நிறுத்தாமல், மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.