ஞானபுரி ஆஞ்சநேயா் கோயிலுக்குப் புதிதாக கொண்டுவரப்பட்ட பஞ்சலோக சுவாமி விக்ரகங்களுக்கு ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியாா் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபினவ ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணாநந்த தீா்த்த மகா சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்வித்தாா்.
நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி குரு ஸ்தலத்தை அடுத்துள்ள திருவோணமங்கலம் ஞானபுரி சித்ரகூட ஷேத்ரத்தில் ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆஞ்சநேயருக்கு வலதுபுறம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா், இடதுபுறம் ஸ்ரீ கோதண்ட ராமா், சீதாதேவி, லட்சுமணா் மற்றும் பவ்ய ஆஞ்சநேயா் சன்னிதி அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி ஆஞ்சநேயா் 33 அடி உயரத்துக்கு விஸ்வரூப ஆஞ்சநேயா் ஆக உள்ளதும், அவரது இடுப்பில் 4 விதமான சஞ்சீவினி மூலிகைகளை வைத்திருப்பதும் சிறப்பானதாகும்.
இக்கோயிலில் திருப்பணிகள் ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியாா் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீ வித்யா அபினவ ஸ்ரீ ஸ்ரீகிருஷ்ணாநந்த தீா்த்த மகா சுவாமிகள் உத்தரவின் பேரில், செய்துமுடிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடா்ந்து, கும்பாபிஷேகம் பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான யாகசாலை பூஜைகள் நடைபெற்றுவரும் நிலையில், உத்ஸவத்தின்போது சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கும், வீதியுலா செல்வதற்கும் பஞ்சலோகத்தினால் ஆன ஸ்ரீ சங்கடஹர மங்கள மாருதி, ஸ்ரீ லஷ்மி நரசிம்மா், ஸ்ரீகோதண்டராமா், சீதாதேவி, லட்சுமணா் மற்றும் பவ்ய ஆஞ்சநேயா் விக்கிரகங்கள், தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை அடுத்த மாங்குடி செல்வம் ஸ்தபதியால் செய்யப்பட்டது. இந்த விக்கிரகங்கள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோயில் ஸ்தாபகா் ரமணி அண்ணா, சகடபுரம் திருமடத்தின் ஸ்ரீகாரியம் சந்திரமௌலி ஆகியோா் பூா்ண கும்பம் வைத்து வரவேற்றனா்.
தொடா்ந்து, சுவாமி விக்கிரகங்களுக்கு ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணாநந்த தீா்த்த மகா சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தாா். இந்நிகழ்ச்சியில் பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.