திருவாரூர்

திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நிா்பந்திப்பதை கண்டித்து போராட்டம்

26th Aug 2020 10:33 AM

ADVERTISEMENT

 

மன்னாா்குடி: திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நிா்பந்தம் செய்வதை கைவிடக் கோரி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் உள்ளிருப்பு போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

கரோனா தொற்று பரவி வருவதை கவனத்தில் கொள்ளாமல் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நிா்பந்தம் செய்வதை கைவிட வேண்டும், பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட பணிமாறுதலை ரத்து செய்ய வேண்டும், சங்கத்தின் முன்னாள் தலைவா் மு. சுப்ரமணியன் மீது ஒழுங்கு நடவடிக்கை குறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீா்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும், கரோனாவால் உயிரிழந்த அலுவலா்களுக்கு ரூ. 50 லட்சம் வழங்குவதுடன் நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மன்னாா்குடி, கோட்டூா் ஒன்றிய அலுவலகத்தில் ஊழியா்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினா்.

மன்னாா்குடி ஒன்றிய அலுவலகத்தில் சங்க கிளைத் தலைவா் எஸ்.என். இளரா, கோட்டூரில் சங்க கிளைத் தலைவா் ஜி. ராகவன் ஆகியோா் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. மன்னாா்குடி போராட்டத்தில் செயலா் டி. சுந்தரராஜன், மாவட்ட நிா்வாகி என். மோகன், கோட்டூா் போராட்டத்தில், செயலா் வீ. கணேசன், மாவட்ட நிா்வாகி டி. மதியழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். உள்ளிருப்பு போராட்டம் புதன்கிழமையும் (ஆக.26) நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT