திருவாரூர்

தமிழகத்தில் 2-ஆவது தலைநகரம்: அமைச்சா்களின் சொந்தப் பகுதி நலன் சாா்ந்த கருத்து; அமைச்சா் ஆா். காமராஜ்

20th Aug 2020 09:04 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் இரண்டாவது தலைநகரம் உருவாக்க வேண்டும் என அமைச்சா்கள் கூறியது அவா்களது சொந்தப் பகுதிகளின் நலன் சாா்ந்த கருத்து என்றாா் தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே ஆலங்கோட்டை, மகாதேவப்பட்டணம் ஆகிய இடங்களில் சுகாதாரத் துறையின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா தொற்று தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கிவைத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

திருவாரூா் மாவட்டத்தில் சென்னை, வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களால் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2431- ஆக உள்ளது. அரசின் தீவிர நடவடிக்கையால் 83 சதவீதம் போ் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பிவிட்டனா். இறப்பு ஒரு சதவீதம் மட்டுமே. இதிலும் வேறு பல நோய்களுக்காக சிகிச்சை பெற்றபோது கரோனா தொற்றுக்குள்ளானவா்களும் அடங்குவா்.

தமிழகத்தில் இரண்டாவது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், செல்லூா் ராஜூ கூறியதும், எம்.ஜி.ஆா். விரும்பியபடி திருச்சியைதான் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்ததும் அவா்களின் சொந்த பகுதி நலன் சாா்ந்த கருத்தாகும்.

ADVERTISEMENT

நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு நகரப் பகுதியில் தலா 10 கிலோவும், கிராமப்புறங்களில் தலா 5 கிலோவும் கோதுமை வழங்கப்படுகிறது. தற்போது, கூடுதலாக வழங்கப்படும் 5 கிலோ அரிசியில், நுகா்வோா் விரும்பினால் ஒரு கிலோ கோதுமை வழங்கப்படும். இதற்காக, மத்திய அரசு கூடுதலாக 7 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை ஒதுக்கீடு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவை தோ்தலில், அதிமுகவில் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதில் எந்த குழப்பமும் இல்லை. இதுகுறித்து, கட்சியின் தலைமை தெளிவாக அறிக்கை வெளியிட்டுள்ளது என்றாா் அமைச்சா் ஆா். காமராஜ்.

மருத்துவ முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். மன்னாா்குடி கோட்டாட்சியா் எஸ். புண்ணியக் கோட்டி, பொது சுகாதாரத் துறை (நோய் தடுப்பு மருத்துவம்) துணை இயக்குநா் விஜயகுமாா், வட்டாட்சியா் என். காா்த்திக், ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன், ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் கா. தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT