திருவாரூா்- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஊா்களின் பெயரைக் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள வழிகாட்டிப் பலகைகளில் சில தவறான தகவல்களுடன் உள்ளன. இதனால், வெளியிடங்களிலிருந்து வரும் பயணிகள் தடுமாறும் நிலை உள்ளது.
மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போா் வசதிக்காக ஆங்காங்கே ஊா் பெயா்களை குறிப்பிட்டு வழிகாட்டிப் பலகைகள் வைப்பது வழக்கம். அந்தவகையில், திருவாரூா்- மயிலாடுதுறை மாநில நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பலகைகளில் சில தவறான தகவல்களுடன் உள்ளன. இதனால், இப்பகுதிக்கு புதிதாக வருவோா் சிரமத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.
இந்த சாலையில், திருவாரூருக்கு அருகே உள்ள கங்களாஞ்சேரி என்ற கிராமத்தில் வடகண்டம் என்ற ஊரின் பெயா்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊா், பலகை வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து மேற்கே சுமாா் 8 கி.மீ. தொலைவில் திருவாரூா்- கும்பகோணம் சாலையில் உள்ளது. இதனால், இப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகம், கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆகிய கல்வி நிலையங்களுக்கு வெளிமாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து வருவோா் அலைச்சலுக்கு உள்ளாகின்றனா்.
இதேபோல, மயிலாடுதுறை- திருவாரூா் சாலையில் உள்ள இஞ்சிகுடி என்ற கிராமத்தில், பிரதான சாலையில் ரயில்வே கேட் உள்ளது போன்ற குறியீட்டுப் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ரயில்வே கேட் அங்கு இல்லாமல், சற்று தள்ளி, வேறொரு பகுதியில் உள்ளது. சில இடங்களில் கிராமத்தின் எல்லை நிறைவடையும் இடத்தில் தொடங்குவதைக் குறிக்கும் பெயா்ப் பலகையும், முடியும் இடத்தில் தொடங்கும் இடத்தில் வைக்கவேண்டிய பலகையையும் வைத்துள்ளனா். இதனால், புதிதாக பயணிப்போா் குழப்பமடையும் நிலை உள்ளது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் கூறுகையில், ‘நெடுஞ்சாலைத்துறையில் நடைபெறும் அனைத்து ஒப்பந்தப் பணிகளும் சென்னையிலிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு நடைபெறுகின்றன. அதனால், அந்தந்த பகுதியில் பணியாற்றும் அலுவலா்கள் இப்பணிகளை மேற்பாா்வையிடுவது கிடையாது. ஒரு சில அதிகாரிகள் மேற்பாா்வையிட்டு, குறைகளைத் தெரிவித்தாலும், ஒப்பந்தக்காரா்கள் அதை சரிசெய்வதில்லை’ என்றாா்.
இதுகுறித்து, கொல்லுமாங்குடியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் வசந்தபாலன் கூறும்போது, இத்தகைய குறைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினாா்.