அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைப் பேரளம் பகுதியில் உடனடியாகத் திறக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக ஞாயிற்றுக்கிழமை அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
நன்னிலம் வட்டத்தில் அறுவடையே நடைபெறாத நேரங்களில் சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டன. ஆனால் தற்போது ஆழ்துளைக் கிணறு மூலம் சாகுபடி செய்த முன் பட்ட குறுவைச் சாகுபடி அறுவடை நடைபெறும் நேரத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முன்னர் நடைபெற்ற குளறுபடிகளைக் காரணங்களைக் காட்டி மூடியிருப்பது கண்டிக்கத்தக்கது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு யார் காரணம் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விடுத்து, தற்போது அறுவடை நடைபெறுகிற நேரத்தில் நெல்கொள்முதல் நிலையங்களை மூடி இருப்பது கண்டிக்கத்தக்கது. இது தவறு செய்தவர்களை விடுத்து விவசாயிகளைத் தண்டிப்பது போன்று உள்ளது.
தினசரி மழை பெய்து கொண்டிருப்பதால், விவசாயிகள் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே விவசாயிகளின் பரிதாப நிலையைக் கருத்தில் கொண்டு திருக்கொட்டாரம், வாளுர், பேரளம், வேலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உடனடியாக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.