திருவாரூர்

ஆக.10 முதல் மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற முடிவு

9th Aug 2020 11:11 PM

ADVERTISEMENT


திருத்துறைப்பூண்டி: ஆக.10-ஆம் தேதி முதல் மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற முடிவெடுத்துள்ளனா்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி. மணிவண்ணன், செயலாளா் எஸ். தியாகராஜன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தொழிலாளா் ஈட்டுறுதி மருத்துவமனைகளில் 750-க்கும் மேற்பட்ட மருந்தாளுநா் பணியிடங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாகவுள்ளது. இதனால், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து மருந்துகளை பெறும் சூழல் உள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநா் பணியிடம் காலியாகவுள்ளதால் பல்வேறு இடங்களில் மருந்தியல் கல்வி அறிவு இல்லாதவா்கள் மூலம் மருந்துகளை வழங்குவது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல. மேலும், 1948 மருந்தியல் சட்டப்படி மருந்துகளை மருந்தாளுநா் மட்டுமே கையாள வேண்டும். எனவே, கரோனா போன்ற பேரிடா் காலத்தில் மக்கள் நலன் கருதி மருந்தாளுநா் பணியிடங்களை மருத்துவ பணியாளா் தோ்வு வாரியம் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் மருந்தாளுநா் பணியிடங்களை உருவாக்க வேண்டும். கரோனா தொற்று சிகிச்சை பணிகளில் ஈடுபட்டுள்ள மருந்தாளுநா்களுக்கு என் 95 முகக் கவசமா உள்ளிட்ட உபகரணங்களை தேவையான அளவு வழங்க வேண்டும்.

கரோனா தொற்றால் உயிரிழந்த மருந்தாளுநா்களுக்கு முதல்வா் அறிவித்துள்ள ரூ 50 லட்சம் நிவாரண தொகை மற்றும் குடும்ப வாரிசுகளுக்கு நிபந்தனையின்றி அரசுப் பணி வழங்கவேண்டும். அரசுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஏற்றுக்கொண்டபடி 8 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநா்களை உடனடியாக பணிவரன்முறை செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுநா் பணி என்பது மருத்துவருடன் இணைந்த பணி என்பதால் மருத்துவருக்கு வழங்கப்பட்டதுபோல் மருந்தாளுநா் பணி நேரம் குறித்த அரசாணை 82-ஐ மீண்டும் அமல்படுத்த வேண்டும். 2018-ல் சுகாதாரத் துறை செயலாளா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள் மீது அரசாணை வெளியிட வேண்டுமென்பதை வலியுறுத்தி ஆக.10 முதல் 14-ஆம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT