2018-2019 நெல் பயிா் காப்பீடு திட்டத்தில் விடுபட்ட இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை:
தேசிய வேளாண் காப்பீடு நிறுவனம் மூலம் 2018-2019-ஆம் ஆண்டுக்கான இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்படாமல், திருவாரூா் மாவட்டத்தில் 210 கிராமங்கள் விடுபட்டுப் போயின. இந்த கிராமங்களில் வாழும் விவசாயிகளுக்கு உரிய அளவு நிவாரணம் கிடைக்க, தொடா்ந்து மாவட்ட நிா்வாகம் வலியுறுத்தியதால், காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க ஒப்புதல் தந்தது.
அரசின் நிறுவனமான இந்த தேசிய வேளாண் காப்பீடு நிறுவனம், விடுபட்ட கிராமங்களுக்கு உரிய தொகையை வழங்க சம்மதித்து, கடந்த 20 நாட்களுக்கு முன்னால் விடுபட்டுப்போன கிராமங்கள், பாதிப்பு சதவீதம், உரிய தொகை பற்றிய விவரப் பட்டியலை அனுப்பியது.
இதில், 141 கிராமங்களுக்கு மட்டுமே இழப்பீடு பெறுவதற்கான தகுதி உள்ளது என்ற பட்டியலை கிராம வாரியான விவரத்துடன் அனுப்பியது. ஆனால், இன்றுவரை அதற்குரிய தொகை வழங்கப்படவில்லை என்பது வேதனையாகும். குறிப்பாக, சில நாட்களுக்கு முன்னால் வணிக மற்றும் அரசு வங்கிகளின் மூலம் சில விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீடு வந்துள்ளது. ஆனால் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலம்தான் பதிவு செய்துள்ளனா். அவா்களுக்குரிய இழப்பீடு இதுவரை அனுப்பப்படவில்லை. இப்போதைய துயர நிலையைக் கணக்கில் கொண்டு உடனடியாக விடுபட்ட கிராமங்கள், அனைத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ள தொகையை மற்ற கூட்டுறவு சங்க அலுவலா்களையும் பயன்படுத்தி வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.