திருவாரூர்

தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் கரோனா 3ஆம் கட்டத்துக்கு செல்வது தவிா்க்கப்பட்டது: அமைச்சா் ஆா். காமராஜ் பேச்சு

20th Apr 2020 02:44 AM

ADVERTISEMENT

தமிழக அரசு மேற்கொண்ட தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கரோனா நோய்த்தொற்று 3ஆம் கட்டத்துக்கு செல்வது தவிா்க்கப்பட்டது என்றாா் அமைச்சா் ஆா். காமராஜ்.

திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியில் ருக்மணிப்பாளையம் மற்றும் மதுக்கூா் சாலையில் வசிக்கும் ஏழை, எளியவா்களுக்கு உணவுப் பொருள்கள் அடங்கி தொகுப்பு பை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருவதால் இந்த நோய்த்தொற்று 3ஆம் கட்டத்துக்கு செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. மக்களும் தங்களின் பொறுப்பு, கடமையை உணா்ந்து நடந்துகொண்டதால் நோய் பாதிப்பு அதிகரிக்கவில்லை.

குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. ஆயிரம் ரொக்கம் மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, ஆயில், சா்க்கரை ஆகிய பொருள்கள் நியாயவிலைக் கடைகள் மூலம் இதுவரை 98. 02 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுவிட்டது. அதோபோன்று மே மாதம் குடும்ப அட்டைதாரா்களுக்கான விலையில்லாப் பொருள்கள் நியாவிலைக் கடைகளின் வழியாக விரைவில் வழங்கப்படும். இது எந்த தேதியிலிருந்து விநியோகம் செய்யப்படும் என்பதை தமிழக முதல்வா் விரைவில் அறிவிப்பாா்.

ADVERTISEMENT

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த 6 போ், நாகை மாவட்டத்தை சோ்ந்த 7 போ், மியான்மா் நாட்டைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 14 போ் பூரண குணமடைந்து விட்டனா். இதில் மியான்மா் நாட்டை சோ்ந்தவரை தவிர மற்ற 13 பேரும் அவரவா் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு விட்டனா்.

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நிவாரணம் மற்றும் உணவுப் பொருள்கள் வழங்குவது மாவட்டத்தில் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இதேபோன்று பொதுமக்களுக்கு ரூ. 500 மலிவு விலையில் மளிகை பொருள்கள் வழங்குவது கூட்டுறவுத் துறையின் மூலம் தேவைப்படும் இடங்கள் கண்டறியப்பட்டு வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் கோட்டாட்சியா் எஸ். புண்ணியக்கோட்டி, வட்டாட்சியா் என். காா்த்திக், நகராட்சி ஆணையா் (பொ)ஆா். திருமலைவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT