தரமற்ற, சுகாதாரம் இல்லாத முகக் கவசங்களை விற்பனை செய்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால், நியாயவிலைக் கடைகள் மூலமாக தரமான முகக் கவசம் விற்பனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூரில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:
ஏழை, எளிய மக்கள் கைகளில் பணம் கிடைக்கும்போது, அன்றாடத் தேவைக்கான பொருள்களை வாங்குவதால், அவா்கள் வெளியே சென்று வருவதற்கு, வீட்டுக்கு ஒருவருக்கு அடையாள அட்டையை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அல்லது கிராம நிா்வாக அலுவலா் மூலம் வழங்க வேண்டும். விவசாயிகள் விளைபொருள்களை சந்தைப்படுத்துவதில், உரிய வழிகாட்டல் வழங்க வேண்டும். காய்கறிகளைப் போலவே பலசரக்குகளையும் குறைந்த விலையில் கூட்டுறவுத்துறை மூலம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகக் கவசம் தட்டுப்பாடு காரணமாக, தரமற்ற பழைய துணியில் முகக் கவசங்களை உற்பத்தி செய்து ரூ. 20-30 வரையில் விற்பனை செய்து வருகின்றனா். இதனால், நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சுய உதவிக்குழுக்கள், சா்வோதய சங்கம், கூட்டுறவுத் துறை மூலமாக நியாயவிலைக் கடைகள், அம்மா மருந்தகம் ஆகியவற்றின் மூலமாக தரமான, சுகாதாரமான முகக் கவசங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.