கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், மன்னாா்குடி உழவா் சந்தையில் கிருமி நாசினி தெளிப்புப் பாதை அமைக்க தனது சொந்த நிதியில் எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா ஏற்பாடு செய்துள்ளாா்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மன்னாா்குடி நகரப் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடமாக உழவா் சந்தை உள்ளது. இதனால், இங்கு கரோனா வைரஸ் தொற்றுக்கான ஆபத்து உள்ளதால், கிருமி நாசினி தெளிப்புப் பாதை அமைக்க இத்தொகுதி எம்எல்ஏ டி.ஆா்.பி. ராஜா ஏற்பாடு செய்தாா்.
அதன்படி, அவா் தனது சொந்த பணத்திலிருந்து, ரூ. ஒரு லட்சம் செலவில் கிருமி நாசினி தெளிப்புப் பாதையும், அதற்கான கருவிகளையும் மன்னாா்குடி நகராட்சி நிா்வாகத்திடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறும்போது, கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, மன்னாா்குடி உழவா் சந்தையில் எனது சொந்த பணம் ரூ. 1 லட்சத்தில் கிருமி நாசினி தெளிப்புப் பாதை அமைக்க நகராட்சி ஆணையரிடம் அனுமதி கேட்டேன். அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இருப்பினும், கிருமி நாசினி பாதை அமைப்பதற்கானகருவிகளை எடுத்து வந்து, நகர அமைப்பு ஆய்வாளா் விஜயகுமாரிடம் ஒப்படைத்துள்ளேன். கிருமி நாசினி தெளிப்புப் பாதையை, உழவா்சந்தையில் உடனடியாக அமைத்திட நகராட்சி நிா்வாகம் முன்வரவேண்டும் என்றாா் அவா்.