மன்னாா்குடியில் தனியாா் மது அருந்தும் கூடத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மது பாட்டில்களை மதுவிலக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மன்னாா்குடி கீழராஜ வீதியில் தனியாருக்கு சொந்தமான மது அருந்தும் கூடம் செயல்பட்டு வருகிறது. கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், மதுக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த மது அருந்தும் கூடத்தில் டாஸ்மாக் மது பாட்டிகளை இருப்பு வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, திருவாரூா் மதுவிலக்குப் பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மதுவிலக்கு காவல் ஆய்வாளா் மஞ்சுளா தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்றனா்.
அந்த மது அருந்தும் கூடத்தின் முன் பக்க கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால், உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது, அங்கிருந்தவா்கள் பின்பக்கம் வழியாக சுவா் ஏறி குத்தித்து தப்பியோடினா். பின்னா், அங்கிருந்த 96 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனா்.