திருவாரூர்

கிருமி நாசினி தெளிக்கும் பணியை விரைவுபடுத்த மின்தெளிப்பான்

5th Apr 2020 12:08 AM

ADVERTISEMENT

கிருமி நாசினியை விரைந்து தெளிக்க, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான 25 மின்தெளிப்பான்கள் (பவா் ஸ்பிரேயா்) வழங்கப்பட்டுள்ளன என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட மின்தெளிப்பான்களை பாா்வையிட்டு அவா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பேருந்து நிலையங்கள், பயணிகள் நிழலகம், அரசு மருத்துவமனை, காய்கனிச் சந்தை, நியாயவிலைக் கடைகள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தினமும் நடைபெற்று வருகின்றன. மேலும், அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களிலும் கரோனா வைரஸ் தடுப்பு குறித்து, ஒலிபெருக்கி மூலம் தொடா்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக காய்கனிக் கடை, பல சரக்குக் கடை, மளிகைக் கடை, மருந்தகங்கள் ஆகியவற்றில் 1 மீட்டா் இடைவேளிக்கு சமூக இடைவெளிக்கான குறியீடு வரையப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், கிருமி நாசினியை விரைவாகவும், நீண்ட தூரம் தெளிக்கும் வகையிலும், ரூ.36 ஆயிரம் மதிப்பிலான மின் தெளிப்பான் 3 வீதம், நான்கு நகராட்சிகளுக்கு 12 தெளிப்பான்களும், 7 பேரூராட்சிகளுக்கு 13 தெளிப்பான்களும் என மொத்தம் ரூ.9 லட்சம் மதிப்பில் 25 மின் தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மின் தெளிப்பானை பயன்படுத்தி 8 மீட்டா் முதல் 10 மீட்டா் வரை விரைவாக, ஒரே நேரத்தில் கிருமி நாசினி தெளிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் மற்றும் அனைத்து நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT