மீன் மற்றும் இறைச்சிக் கடைகளை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும்வரை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக, வழக்குரைஞா் பூரண விஜய பூபாலன், நுகா்வோா் அமைப்பின் பொருளாளா் எஸ். நாகராஜன் ஆகியோா் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, அத்தியாவசியப் பொருள்களை வாங்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கிராமப் பகுதிகளில் காய்கறி மற்றும் மளிகைக் கடைகளில் கூட்டமாக நின்று பொருள்களை வாங்கிச் செல்கின்றனா். இதைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை வேண்டும்.
மேலும், இறைச்சி மற்றும் மீன் விற்பனைச் செய்யும் கடைகளில் அதிகக் கூட்டம் காணப்படுகிறது. எனவே, இறைச்சி மற்றும் மீன் கடைகளை ஊரடங்கு உத்தரவு முடியும்வரை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.