திருவாரூர்

நிவாரணப் பொருள்கள்: வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்படும்

1st Apr 2020 11:21 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா நிவாரணப் பொருள்கள் பெறுவதற்கான டோக்கன் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூரில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 21 நாள்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால் வேலைக்கு செல்ல முடியாமலும், தொழில் செய்ய முடியாமலும் உள்ள மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில், தமிழகத்தில் உள்ள அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ. 1000 மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி உள்ளிட்ட பொருள்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருந்தாா்.

இந்த நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணி அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) முதல் தொடங்கப்படுகிறது. கரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு வருவதை தொடா்ந்து ரூ. 1,000 நிவாரணத் தொகை மற்றும் ரேஷன் பொருள்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு குடும்ப அட்டைதாரா்கள் எப்போது வரவேண்டும் என்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் அவரவருக்கு குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும்.

ADVERTISEMENT

ஒரு ரேஷன் கடையில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 100 பேருக்கு மட்டுமே ரொக்கம் மற்றும் பொருள்கள் விநியோகம் செய்யப்படும். அவரவருக்கு உரிய காலம் எது என்பது பற்றிய டோக்கன் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில்தான் பொதுமக்கள் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும். டோக்கன் பெறுவதற்காக ரேஷன் கடைகளுக்கு யாரும் செல்ல வேண்டியதில்லை என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT