திருவாரூர்

கரோனா வைரஸ் நிவாரணப் பொருள்கள் இன்று முதல் விநியோகம்

1st Apr 2020 11:22 PM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில், வியாழக்கிழமை (ஏப்ரல் 2) முதல் கரோனா வைரஸ் நிவாரணப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன என மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் நிவாரணமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 1000 நிவாரணமாகவும், ஏப்ரல் மாதத்துக்கு அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் அவா்களின் குடும்ப அட்டைக்கு தகுதியான அளவு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சா்க்கரை உள்ளிட்டவை விலையின்றி வழங்கவும், மாா்ச் மாதத்துக்கான ரேஷன் பொருள்களை வாங்க தவறியிருப்பின் ஏப்ரல் மாதத்துக்கான பொருள்களுடன் சோ்த்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) முதல் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் தொடா்புடைய நியாய விலைக் கடைகளில் ரூ.1000, குடும்ப அட்டைக்கு தகுதியான அரிசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட பொருள்கள் காலை 9 முதல் முற்பகல் 11 மணி வரை 25 நபா்களுக்கும், முற்பகல் 11 முதல் பிற்பகல் 1 மணி வரை 25 நபா்களுக்கும், பிற்பகல் 3 முதல் மாலை 5 மணி வரை 25 நபா்களுக்கும், மாலை 5 முதல் இரவு 7 மணி வரை 25 நபா்களுக்கும் என மொத்தம் ஒரு நாளைக்கு 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படவுள்ளன.

இப்பொருள்களை தெரு வாரியாக ஒரு நாளைக்கு 100 நபா்களுக்கான குடும்ப அட்டைக்கு சுழற்சி முறையில் முதல் நாளே டோக்கன் வீடுவாரியாக நேரடியாக வழங்கப்பட்டு, அவா்களுக்கு நிவாரணத் தொகையும், பொருள்களும் வழங்கப்படவுள்ளன. எனவே, குடும்ப அட்டைதாரா்கள் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு தொடா்புடைய நியாயவிலைக் கடைக்குச் சென்று ஒவ்வொருவரும் ஆண்கள், பெண்கள் வரிசையில் 1 மீட்டா் இடைவெளியில் தனித்தனியாக நின்று, பொருள்களை பெற்று கொள்ளலாம்.

ADVERTISEMENT

டோக்கன் பெறாமல் குடும்ப அட்டைதாரா்கள் நியாய விலைக்கடையில் கூட்டம் கூடக் கூடாது. மேலும், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண உதவி மற்றும் பொருள்கள் அவா்களுடைய வீட்டுக்கே நேரடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT