திருவாரூர்

10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

22nd Sep 2019 05:05 AM

ADVERTISEMENT


திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பத்தாயிரம் பனைமரம் நடும் பணியின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட மைய நூலக வளாகத்தில், பனை விதைகளை நட்டு, நேதாஜி கல்விக்குழுமத்தின் தலைவர் சு. வெங்கடராஜலு பேசியது:
தமிழகத்தின் பாரம்பரிய மரமாக, தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த மரமாக பனை உள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து அவற்றை இன்றைய தலைமுறைக்கு எடுத்து வந்த பெருமைக்கு சொந்தமான ஓலைச் சுவடிகளைத் தந்த மரமாக உள்ளது பனைமரம். இவை மட்டுமல்ல நில அரிப்பைத் தடுத்து சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் மரமாக இருக்கும் பனை விதைகளை பாதுகாக்கும் வகையில், ஓர் இயக்கமாக இந்த நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
பின்னர், மாணவிகளுக்கு பனை விதைகள் வழங்கப்பட்டன. மேலும், விழாவில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு பனை மரத்தின் அவசியம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கல்லூரி மாணவிகள் தங்களது ஊர்களில் பனை விதைகளை நடுவதற்கும், திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழக சாலையின் இருபுறமும் நிறைய பனைமரம் விதைக்கவும்  திட்டமிடப்பட்டுள்ளது.
விழாவில், மாவட்ட மைய நூலக அலுவலர் ஆண்டாள், நூலகர்கள் ஆசைத் தம்பி, அனிதா, அன்னப்பழம், திருவாரூர்த் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் சக்தி செல்வகணபதி, செயலாளர் ஆரூர் அறிவு, நேதாஜி கல்லூரி துணை முதல்வர் இரா.அறிவழகன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் வினோதா, விஜயராகவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT