திருவாரூர்

இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கம் திறக்கப்படுமா?ஏக்கத்தில் வீரர்கள்

22nd Sep 2019 05:05 AM

ADVERTISEMENT


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கைத் திறந்துவைத்து, பயன்பாட்டுக்கு எப்போது கொண்டுவரப்படும் என்ற ஏக்கத்தில் விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
தமிழக அரசின் சார்பில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் முதன்முறையாக மன்னார்குடியில் இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்க 2005-ஆம் ஆண்டில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, இதற்காக மன்னார்குடி எம்ஜிஆர் நகரில் உள்ள நகராட்சி கோபாலசமுத்திரம் பள்ளி வளாகத்தில் சுமார் 2 ஆயிரம் சதுர அடி நிலம் தேர்வு செய்யப்பட்டது. 
இதைத்தொடர்ந்து, கல்வி வரி நிதியிலிருந்து ரூ. 7 லட்சம் ஒதுக்கீடு  செய்யப்பட்டு, கட்டுமானப்  பணிகள் தொடங்கப்பட்டன. பின்னர், விளையாட்டு அரங்கத்தின் உள்புறம், தரைத்தளம், இருக்கைகள், மர வேலைப் பணிகளுக்கு ரூ. 5 லட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. 
 இந்நிலையில், அப்போதைய நகராட்சி ஆணையர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, அடுத்தடுத்து, வந்த ஆணையர்கள் இறகுப்பந்து விளையாட்டு அரங்கக் கட்டுமானப் பணியில் போதிய ஆர்வம் செலுத்தவில்லை. இதனால், நிதி ஒதுக்கீடு இல்லாமல் கட்டுமானப் பணிகள் பாதியில்  நிறுத்திவைக்கப்பட்டன. 
பின்னர், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையைத் தொடர்ந்து, 2015-ஆம் ஆண்டு தேவையான கூடுதல் நிதி பெறப்பட்டு, நிறுத்திவைக்கப்பட்டிருந்த உள்விளையாட்டு  அரங்கக் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டன.  ஆனால், பயன்பாட்டுக்காக இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், இறகுப் பந்து விளையாட்டு வீரர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.
  தமிழக அரசின் விளையாட்டு  மேம்பாடுத் துறையின்  சார்பில்,  குறுவட்டம், வட்டாரம் அளவிலான  பள்ளிகளுக்கிடையே ஆண்டுதோறும்  விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், அரசு, நகராட்சி, ஊராட்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்தான் அதிக அளவில் பங்கேற்கின்றனர். இவர்களை  இறகுப்பந்து போட்டிக்கு என தனியார் விளையாட்டு அரங்கத்துக்கு அழைத்துச்  சென்று, எங்களது சொந்தப் பணத்தை கட்டணமாக செலுத்தி பயிற்சியளிக்க வேண்டியுள்ளது என உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.  
இதுகுறித்து, இறகுப் பந்துவிளையாட்டு வீரர் ந. ரமேஷ் கூறியது:
மன்னார்குடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி கடந்த 2005-ஆம் ஆண்டு தொடங்கி 2016-ஆம்  ஆண்டில் நிறைவடைந்தது. இப்பகுதியில் கிரிக்கெட்,  கபடிக்கு பிறகு அடுத்த நிலையில் அதிகம் பேர் விளையாட ஆர்வம்  காட்டுவது  இறகுப் பந்து   விளையாட்டுக்குத்தான். மற்ற இரண்டு விளையாட்டுகள் பொது வெளியில் விளையாடலாம். இறகுப் பந்து விளையாட்டை அரங்கத்தில்தான் விளையாட முடியும். மன்னார்குடியில் தனியார் இறகுப்பந்து விளையாட்டு அரங்கம்  ஒன்று மட்டும்தான்  உள்ளது. தற்காலிக அரங்கங்கள் ஒருசில இருந்தாலும், அவை தரமானதாக இல்லை. தனியார்  அரங்கத்தில் கட்டணம் செலுத்தி விளையாடும் அளவுக்கு ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளால் முடியாத  நிலை உள்ளது. நகராட்சி இறகுப் பந்து விளையாட்டு அரங்கம் திறக்கப்படாமல் இருப்பதால், திருவாரூர், தஞ்சையில்  உள்ள அரசு இறகுப் பந்து விளையாட்டு அரங்கத்துக்குச் சென்று பயிற்சி பெற வேண்டியிருப்பதால் இறகுப் பந்து  வீரர்களுக்கு பொருள் செலவும், காலவிரயமும் ஏற்படுகிறது என்றார்.
 சேதமடையும் தரைத்தளம்: கடந்த 2016-ஆம் ஆண்டு பணிகள் முடிவடைந்த நிலையில், விளையாட்டு அரங்கத்தை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்க நகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்தபோது, அரங்கம்  அமைக்கப்பட்டதன்  நோக்கம்  நிறைவேறாமல் போய்விடும் என விளையாட்டு வீரர்கள் தரப்பில் எதிர்ப்பு வந்தவுடன் அந்த முடிவைக் கைவிட்டனர். 500-க்கும் மேற்பட்ட இறகுப் பந்து வீரர்கள் கையொப்பமிட்டு  விளையாட்டு  அரங்கத்தை, கைப்பந்து வீரர்கள் அமைப்பிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கக் கோரி  நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால்,  இதற்கு உரிய பதில் இது நாள் வரை தெரிவிக்கப்படவில்லை. மேலும், தரைத்தளம் மரப்பலகையால் அமைக்கப்படாமல்,  மேட் விரிப்பாக இருப்பதால் தண்ணீர் பட்டு, உள்விளையாட்டு அரங்கத்தின் தரைத்தளம் சேதமடைந்து வருகிறது என விளையாட்டு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.
 இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம்தரப்பில் கூறியது:
இறகுப் பந்து விளையாட வேண்டும் எனக் கேட்டு வருபவர்களுக்கு விளையாட்டு அரங்கத்தைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. விரைவில் நகராட்சி  சார்பில் இறகுப் பந்து விளையாட்டுப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கஜா புயலில் விளையாட்டு அரங்கத்தின் மேற்கூரை சேதமடைந்ததால் மழைநீரில்  தரைத்தளம் சிறிது சேதமடைந்துள்ளது. தற்போது, மேற்கூரை சீரமைக்கப்பட்டுவிட்டது. விளையாட்டு அரங்கம் இருப்பது குறித்து அனைத்துக் கல்வி நிலையங்களுக்கு உரிய முறையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தை அணுகி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர்.
இருப்பினும், இறகுப் பந்து உள் விளையாட்டு அரங்கம் முறைப்படி திறக்கப்பட்டால்தான், வீரர்கள் சிரமமின்றி பயிற்சி பெறமுடியும். எனவே, இந்த விளையாட்டரங்கை முறைப்படி திறந்துவைத்து, காவலரை நியமித்து பராமரிக்க வேண்டும் என்பது விளையாட்டு வீரர்களின்எதிர்பார்ப்பாக உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT