திருவாரூர்

5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

17th Sep 2019 07:54 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பை ரத்து செய்யக் கோரி திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்கிற தமிழக அரசின் அறிவிப்பை கண்டித்தும், அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாணவர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் துரை. அருள்ராஜன், மாவட்டத் தலைவர் சு. பாலசுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில், மாணவர், இளைஞர் பெருமன்ற நிர்வாகிகள் கோவி அறிவழகன், எஸ். பாலமுருகன், அ.பிச்சமுத்து, சிவ. ரஞ்சித், அஸ்வினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
திருவிக கல்லூரியில்...
திருவாரூர் திரு.வி.க அரசு கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில், அதன் மாவட்டச் செயலர் ஹரிசுர்ஜித் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 5,8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT