திருவாரூர்

வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றியவரை காரில் கடத்திய கும்பல் தலைமறைவு: கடத்தப்பட்டவர் மீட்பு: கார் ஓட்டுநர்கள் கைது

17th Sep 2019 07:56 AM

ADVERTISEMENT

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கடத்தப்பட்டவரை போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக கார் ஓட்டுநர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
நாகை மாவட்டம், திருப்பூண்டி அருகேயுள்ள மகழியை சேர்ந்தவர் ஆசைதம்பி (35). இவர், தனக்கு அறிமுகமான திருவாரூர் மாவட்டம், நன்னிலம் முல்லைநகரை சேர்ந்த குகன், அவரது மனைவி கோமதி ஆகியோர் கூறியப்படி, திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகத்தில் ஆசைதம்பிக்கு 45 நாள்களில் வேலை வாங்கி தருவதற்காக ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்திருந்தாராம். இந்நிலையில், குகன் தம்பதியர் கூறியபடி வேலை வாங்கி தராததுடன், பணத்தையும் திருப்பி தரவில்லையாம். இதுகுறித்து பலமுறை கேட்டும் எந்த பதிலும் இல்லையாம். பணம் கொடுத்து 9 மாதம் கடந்த நிலையிலும் வேலையும், பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து, சனிக்கிழமை ஆசைதம்பி நன்னிலத்தில் உள்ள குகன் வீட்டுக்குச் சென்று பணத்தை திருப்பிக்கேட்டபோது, அவரை தாக்கி திருப்பி அனுப்பிவிட்டனராம். 
இதுகுறித்து, ஆசைதம்பி தனது உறவினர் பெருகவாழ்ந்தானை சேர்ந்த ஜோதிபாசுவிடம் தெரிவிக்க பெருகவாழ்ந்தானுக்கு வந்துள்ளார். பிரச்னை குறித்து, குகனுடன் ஜோதிபாசு பேசியபோது இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டதுடன், பணம் வாங்கி ஏமாற்றியதை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக தெரிவித்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆசைதம்பியின் செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டவர்கள், நன்னிலத்தில் குகன் வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்காக விசாரணைக்கு வந்து ஜோதிபாசுவின் வீட்டின் வாசலில் போலீஸார் நிற்பதாக தெரிவித்தனராம்.
இதையடுத்து, வீட்டிலிருந்து வெளியே ஆசைதம்பி, ஜோதிபாசு ஆகியோர் வெளியே வந்ததும், இரண்டு காரில் வந்திருந்த 5-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென வலுக்கட்டாயமாக ஆசைதம்பியை காரில் கடத்தி சென்றனர். இது குறித்து, பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக மன்னார்குடி, முத்துப்பேட்டை பிரதான சாலைகளில் இரும்புத் தடுப்பு அமைத்து போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
 தலையாமங்கலம் காவல் நிலைய போலீஸார், மன்னார்குடி பிரதான சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே வந்த 2 கார்கள் பிரதான சாலையில் செல்லாமல் திடீரென ஊருக்குள் செல்வதை பார்த்த போலீஸார், ஜீப்பில் பின் தொடர்ந்து சென்றதையடுத்து, காரில் சென்றவர்களுக்கு வழி தெரியாததால் அதில் வந்தவர்கள் இறங்கி இருட்டில் மறைந்துவிட்டனர்.
போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது ஒரு காரில் காயத்துடன் இருந்த ஆசைதம்பியை மீட்டு, சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இரண்டு கார்களின் ஓட்டுநர்கள் திருவாரூர் விளம்மலைச் சேர்ந்த அன்புச்செல்வன் (45) குட்டி எனும் ரவிச்சந்திரன்(23) ஆகிய இருவரையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும், பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளர் ஹேமலதாவிடம் ஒப்படைத்தனர். போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT