திருவாரூர்

வலங்கைமான் மாரியம்மன் கோயிலில் பாலாலய விழா: அமைச்சர் காமராஜ் பங்கேற்பு

17th Sep 2019 07:54 AM

ADVERTISEMENT

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பாலாலய விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் உள்ள பிரசித்திப் பெற்ற மகாமாரியம்மன் கோயில் அம்மனை சீதளாதேவி என அழைப்பர். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனிப் பெருவிழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் 8-ஆம் நாளில் நடைபெறும் பாடைக்காவடி விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்பர். நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் இக்கோயில் அம்மனிடம் நோய் குணமானவுடன் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக் கடன் செய்வதாக வேண்டிக்கொள்வர். பிரார்த்தனை நிறைவேறியவுடன் பாடைக்காவடி எடுத்து தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்துவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகள் செய்வதற்காக கோயிலில் பாலாலய விழா நடைபெற்றது. 
இதையொட்டி, செப்டம்பர் 15-ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு விநாயகர் வழிபாடு, மகாசங்கல்பம், ஆசார்யா வர்ணம், வாஸ்துசாந்தி, முதல் பூர்வாங்கம் நடந்தது. தொடர்ந்து, திங்கள்கிழமை (செப்டம்பர் 16) காலை 7.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, யாகசாலை பூஜை, ஹோமம், காலை 9.30 மணிக்கு பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது. இதில், தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், அறநிலைய உதவி ஆணையர் பி. தமிழ்ச்செல்வி, கோயில் தக்கார் அ. ரமணி, செயல் அலுவலர் கே. சிவக்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேகம் 2020-ஆம் பிப்ரவரி 2-ஆம் தேதி
நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT