திறக்கப்படாத அங்காடி கட்டடம்: எம்.எல்.ஏ. கவனிப்பாரா?

திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய கூட்டுறவு அங்காடி கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திறக்கப்படாத அங்காடி கட்டடம்: எம்.எல்.ஏ. கவனிப்பாரா?



திருமருகல்: திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய கூட்டுறவு அங்காடி கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருமருகல் ஒன்றியம், திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில் சுமார் 2,640 குடும்பங்கள் உள்ளன. மேலும், இப் பகுதி மக்களின் தேவைக்காக இரண்டு அங்காடிகள் இயங்கி வருகின்றன. திட்டச்சேரியில் இயங்கி வரும் கூட்டுறவு அங்காடியில் 1,200 -க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.
இந்த கூட்டுறவு அங்காடி திட்டச்சேரி வக்ஃபு நிர்வாக  சபைக்கு சொந்தமான இடத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகைக்கு இயங்கி வருகிறது. இதில் மாதம் முதல் நாள் முதல் கூட்டநெரிசல் இருந்து கொண்டே இருக்கும். இதில் திட்டச்சேரியை சேர்ந்த புதுமனைத்தெரு, புதுத்தெரு, தோட்டத்தெரு, முடுக்குத்தெரு, கிழக்குத் தெரு, பட்டகால்தெரு, தெற்குதெரு, மேலத்தெரு, வடக்குத்தெரு, வெள்ளத்திடல், தோப்புக்களம் மற்றும் வாணியத்தெரு, முதலியார்தெரு, காந்திசாலை, தைக்கால்தெரு, பச்சான்தோப்பு, ஆற்றாங்கரைதெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பொருள்களை வாங்கி பயனடைகின்றனர்.
இதேபோல், ப. கொந்தகையில் அமைந்துள்ள அங்காடி கட்டடம் அரசுக்குச் சொந்தமான கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதில் 1,100 -க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்த கூட்டுறவு அங்காடியில் திருப்பட்டினம் சாலை, இராமலிங்க மேலவீதி, வடக்கு வீதி, பெருமாள் கோயில் தெரு, குயவர் தெரு, அரிசிக்காரத்தெரு, சிவன் கோயில் தெரு, இந்திரா நகர், ஆலங்குடிச்சேரி, உமர் வீதி, நாகூர் சாலை, மரைக்கான் சாவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பொருள்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், திட்டச்சேரி கூட்டுறவு அங்காடியில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையிலும், ஆண்டவர் நகர் பகுதியில் 700 -க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையிலும் புதிய பகுதிநேர அங்காடி கட்டடம் நாகை சட்டப்பேரவை  உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2017-18 )யின் கீழ் ரூ. 10.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டை கடந்த விட்ட நிலையில், இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.  பொதுமக்கள் பயன்பெறும் வகையில், புதிய பகுதிநேர அங்காடி கட்டடத்தை திறக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹிம்  கூறியது:
திட்டச்சேரி பேரூராட்சிக்குள்பட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நாகை சட்டப்பேரவை உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், அங்காடிக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுத்தார். ஆனால், புதிய கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பது வருத்தமளிக்கிறது. எனவே, புதிய அங்காடி கட்டடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் க. இளஞ்செழியன்:  புதிய அங்காடி கட்டடம் கட்டப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியுள்ளது. எனவே, பொதுமக்கள் பயனடையும் வகையில் கட்டப்பட்டுள்ள பகுதிநேர அங்காடி கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com