திருவாரூர்

வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி

13th Sep 2019 06:15 AM

ADVERTISEMENT

வேலையில்லாத சிறுபான்மையினர், இலவச திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தில் பங்கேற்க செப்டம்பர் 20-இல் நேர்காணல் நடைபெற உள்ளது என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:   படித்த வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பைச் சார்ந்த இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையம் மூலம் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குவதற்கும், பயிற்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பு பெறுவதற்கும் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் நிதி உதவியுடன் டாம்கோ மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.  இத்திட்டத்தின்கீழ் ஸ்டிச்சர் கூட்ஸ், கார்மென்ட்ஸ் மற்றும் பிரி அசெம்பிளி ஆபரேட்டர் ஆகிய பயிற்சிகள் 46 நாள்கள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா 20 நபர்கள் வீதம் மொத்தம் 40 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. 
    இத்திட்டத்தின்கீழ் மதவழி சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமலும், 18 முதல் 55 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.  இப்பயிற்சியின்போது ஒரு பயனாளிக்கு ரூ.1,534 பயிற்சி உதவித்தொகையாக அளிக்கப்படும். உண்டு, உறைவிடக் கட்டணம் எதும் வழங்கப்படாது.  இதற்கான நேர்காணல், காஞ்சிபுரம் மாவட்டம், வாலஜாபாத், எண்.64சி, சாலை தெரு புதேரி, குஜராத்சத்திரம் அருகில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் செப்டம்பர் 20-ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.  இந்த திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் அசல் ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச்சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மத்திய காலணி பயிற்சி நிலையம் (89398 13412), தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சென்னை (044-28514846) ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT