திருவாரூர்

விவசாயிகளுக்கு விதை நேர்த்தி செயல்விளக்கம்

7th Sep 2019 01:41 AM

ADVERTISEMENT

வலங்கைமான் வேளாண்மைத் துறை - வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ், மாளிகைத்திடல் - பூண்டி கிராமத்தில் அண்மையில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ், உயிர் உரம் மூலம் சுவர்ணாசப்-1, நெல் விதை நேர்த்தி செயல் விளக்கம் நடைபெற்றது. 
செயல்விளக்கத்தை வலங்கைமான் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயராஜ் செய்து காண்பித்தார். 
உப்புக் கரைசல் சோதனை: விதைக்கும் நெல் விதை தரமான, வீரியமான, முளைப்புப்திறன் கூடிய சான்று பெற்ற நெல் விதையாக இருக்க வேண்டும். அப்போதுதான் மகசூல் இழப்பின்றி கூடுதல் வருவாய் பெறமுடியும். எனவே, ஊப்புக் கரைசல் சோதனையின் மூலம் நாம் தரமான விதையை தேர்வு செய்யலாம். அதற்கு நாம் செய்ய வேண்டியது விதைக்க இருக்கும் விதை நெல், ஒரு நல்ல முட்டை, தண்ணீர் மற்றும் பிளாஸ்டிக் வாளி ஆகியவை தேவை. பிளாஸ்டிக் வாளியில் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் முட்டையை போட வேண்டும். தண்ணீரின் அளவு அடர்த்தி குறைவாக இருப்பதினால் முட்டை அடியில் சென்றுவிடும். பின்னர் அந்த தண்ணீரில் உப்பை கரைத்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது அடியில் உள்ள முட்டையானது ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு மேலே தெரியும்.
 அப்போது,  உப்பு கரைப்பதை நிறுத்த வேண்டும். இப்போது, கரைசல் தயாராகிவிடும். பின்பு விதைக்க இருக்கும் நெல் விதையை சிறிது சிறிதாக கொட்டி கலக்க வேண்டும். அப்போது, தரமில்லாத, முளைப்புப்திறன் இல்லாத விதைகள் மேலே மிதக்கும். அந்த விதைகளை சேகரித்து அகற்றி அடியில் படிந்துள்ள தரமான விதைகளை சேகரித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு சேகரித்த விதையை சுத்தமான தண்ணீரில் நன்கு கழுவி பின்னர் உயிர் உர மருந்தை கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்கலாம்.
விதை நேர்த்தி: ஒரு கிலோ நெல் விதைக்கு 10 கிராம் என்ற அளவில் சூடோமோனாஸ் உயிர் உர விதை நேர்த்தி மருந்தை  எடுத்துக்கொண்டு அதனுடன் ஆரிய அரிசி கஞ்சி சேர்த்து நன்கு கலக்க வேண்டும். கலக்கிய கலவையை நெல் விதையின் மேல் படும்படி நன்கு கலந்து அதை சுமார் 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி பின்னர் விதைப்பு செய்யலாம்.
நாற்றின் வேர் நனைத்தல்: விதை நேர்த்தி செய்யாமல் நாற்றாங்காலில் விதைத்து விட்டாலும், நாற்று பரித்த பின்னர் ஒரு ஏக்கர் நாற்றுக்கு 2 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் 2 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் மருந்தை  தேவையான அளவு தண்ணீரில் கலந்து நாற்றின் வேர்ப் பகுதியை நன்கு நனையும்படி நனைத்து சுமார் 30 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் நடவு செய்யலாம்.
தொழு உரத்துடன் கலந்து இடுதல்: நடவு செய்வதற்கு முன்னர் வயலை தயார் செய்யும்போது அடியுரமாக தொழுஉரம் இடுவோம். அப்போது தொழுஉரத்துடன் உயிர் உரமான 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் 4 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா மருந்தை தொழு உரத்துடன் கலந்து நடவு வயலில் இடலாம். உயிர் உர விதை நேர்த்தி மருந்தின் மூலம் விதை நேர்த்தி செய்வதால் விதை மூலம் பரவக்கூடிய குலைநோய், வேர் அழுகல்நோய், இலைப்புள்ளி நோய் மற்றும் வாடல் நோய் போன்றவை வராமல் தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் வளிமண்டலத்தில் உள்ள  தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தி பயிரின் வேர் மூலமாக பயிருக்கு கிடைக்கச் செய்கின்றது.
இந்த உயிர் உரத்துடன் ரசாயன உரம் மற்றும் ரசாயன பூஞ்சாணகொல்லி ஆகியவற்றை கலக்க கூடாது. எனவே, விவசாயிகள் அனைவரும் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும் என விவசாயிகளை வலங்கைமான் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயராஜ்  கேட்டுக்கொண்டார். விதை நேர்த்தி செயல் விளக்கத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். இறுதியில் உதவி தொழில்நுட்ப மேலாளர் மணிமாறன் அவ நன்றிகூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT