திருவாரூர்

செப்.13-இல் சம்பா சாகுபடியை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 01:40 AM

ADVERTISEMENT

ஒரு போக சம்பா சாகுபடியையாவது பாதுகாக்க வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அச்சங்க மாவட்டத் தலைவர் த. ரெங்கராஜன், மாவட்டச் செயலர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி வருமானத்தை இழந்துள்ள விவசாயிகள், நிகழாண்டு சம்பா சாகுபடியாவது செய்ய முடியுமா என்ற அச்சத்தில் இருந்தனர். இதற்கிடையே, தென்மேற்கு பருவ மழையின் தீவிர பொழிவால்  கர்நாடகத்தில் உள்ள அணைகள் நிரம்பி, அதனால் திறந்துவிடப்பட்ட உபரி நீர், மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. விவசாயிகள் நிம்மதியுடன் சாகுபடி பணியை தொடங்க இருந்தனர். 
இந்நிலையில், மேட்டூர் அணை ஆகஸ்ட் 13-ஆம் தேதி திறக்கப்பட்டது. திறந்து விடப்படும் தண்ணீர், காவிரி டெல்டாவுக்கு வராத அளவில் 2000 கன அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. அதனால் 25 நாள்களுக்கு மேலாகியும், இதுவரையில் பாசனத்துக்கும், நிலத்தடி நீர் மட்ட உயர்வுக்கும் தண்ணீர் வந்து சேரவில்லை. மேட்டூர் அணை கொள்ளளவுக்கு மேல் தண்ணீர் நிரம்பாத நிலையில் அவசரமாக ஏன் திறக்கப்பட்டது என புரியவில்லை. 
குறுவைக்கும், சம்பாவுக்கும் தேவை இல்லாத காலத்தில் தண்ணீரை திறந்து, மேட்டூர் அணை காலத்தில் திறக்கப்பட்டது என்று கூறுவதற்கே திறக்கப்பட்டுள்ளது. விதைக்கப்பட்டுள்ள நீண்ட கால நெல் பயிர்களும், விதைக்க வேண்டிய மத்திய கால ரகங்களுக்கும் தண்ணீர் தேவைப்படும் நிலையில், கடைமடை வரை தண்ணீர் செல்ல இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தண்ணீரின்றி குறுவை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் இருந்தும் சம்பா பயிரிட முடியாமல் உள்ளது. எனவே, 20 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து, முறை பாசனம் இல்லாமல் கடைமடை வரை பாசனம் பெறுவதற்கும், நீர் நிலைகளை நிரப்புவதற்கும் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிரிடும் விவசாயிகள், குத்தகைதாரர்கள் வங்கிகளில் கடன் பெறவும், காப்பீடு செய்யவும் மற்றும் பிற தேவைகளுக்கும் கிராம நிர்வாக அலுவலர் வழங்க வேண்டிய அடங்கல் மற்றும் சாகுபடியாளர் சான்றுகளை உடன் வழங்க வேண்டும், நிபந்தனையின்றி பழைய, புதிய விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் செப்டம்பர் 13-ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT