திருவாரூர்

ஆறுகள் தூர்வாரப்படாததால் தண்ணீர் வந்தும் பயனில்லை: விவசாயிகள் வேதனை

7th Sep 2019 01:31 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூர் பகுதி ஆறுகளில் தூர்வாரப்படாததால், தண்ணீர் வந்தும் பயன் அளிக்காத நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் வெண்ணாறு, வெட்டாறு, கோரையாறு, ஓடம்போக்கியாறு, முடிக்கொண்டானாறு, காட்டாறு, நந்தலாறு, முள்ளியாறு உள்ளிட்ட 17 ஆறுகளும், வடுவூரில் ஒரு ஏரியும் உள்ளது. கூத்தாநல்லூர் வட்டத்தில் பாயும் வெண்ணாற்றில், லெட்சுமாங்குடி பாலம் அருகேயுள்ள தடுப்புக்கு முன்பு ஆற்றின் இரு கரையோரகளிலும் முட்புதர்கள் மண்டி வாய்க்கால்போல் குறுகிய நிலையில் வெண்ணாறு காட்சியளிக்கிறது. இதே ஆற்றில் பாய்க்காரப் பாலம் அருகேயும் ஆறு முழுவதும் காட்டாமணக்கு செடிகள் மண்டிக் கிடக்கின்றன. இதனால், ஆற்று நீர் முன்னேறி செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. 
இதேபோல், சித்தாம்பூர் அருகே பாயும் கோரையாற்றின் நடுவில் பெரிய அளவில், தோப்புபோல புதர்கள் மண்டியுள்ளன. இதனால், கோரையாற்றில் வரும் நீர் ஆற்றில் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துச் செல்கிறது. இதேபோல், ஆறுகளிலும், பாசன வாய்க்கால்களிலும் தூர்வாரததாலும், மண்டிக் கிடக்கும் புதர்களை அகற்றாததாலும் எவ்வளவு தண்ணீர் திறந்து விட்டாலும் விவசாயிகளுக்கு எந்தவிதப் பயனும் இல்லாமல் போகிறது. இத்தகைய நிலைக்கு, பொதுப்பணித் துறை அலுவலர்களின் அலட்சியத்தால் நிகழ்கிறது. இத்தகைய நிகழ்வால் கடைமடைக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளன.     
இதுகுறித்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர்  எம். சிவதாஸ் கூறியது: கடந்த பல மாதங்களாக மழையின்றியும், காவிரி நீர் கிடைக்காமலும் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்
பட்டுள்ளனர். 
இந்நிலையில், கேரளம், கர்நாடகம் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காவிரியில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் கூத்தாநல்லூர் பகுதியில் பாயும் வெண்ணாறு, கோரையாறு உள்ளிட்ட ஆறுகளில் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால், பாசன ஆறுகளில் மண்டிக்கிடக்கும் செடி, கொடிகளால் பாசனத்துக்கு நீர் பயன்படுத்த முடியாதவகையில் பாதிப்படைய செய்கிறது.  எனவே, பொதுப்பணித் துறை அலுவலர்கள் இதுகுறித்து, சிறப்பு கவனம் செலுத்தி பாசன கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி தண்ணீர் கடைமடைக்கு தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்றார் அவர். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT