திருவாரூர்

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக அனுமதியின்றி கிணறு அமைக்கும் பணிகளை கைவிட வலியுறுத்தல்

4th Sep 2019 09:11 AM

ADVERTISEMENT

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்காக அனுமதியின்றி கிணறு அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 
திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்திடம், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன், செவ்வாய்க்கிழமை வழங்கிய கோரிக்கை மனு விவரம்:
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு ஓஎன்ஜிசி, வேதாந்தா நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை ரத்து செய்வதோடு, அத்திட்டம் செயல்படுத்துவதை கொள்கை பூர்வமாக கைவிட வேண்டுமென வலியுறுத்தி ஜூலை 25, 26 தேதிகளில் தில்லியில் போராட்டம் நடத்தி, பிரதமர் அலுவலகத்தில் விரிவான கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. 
அந்த மனு குறித்து ஹைட்ரோகார்பன் திட்ட இயக்குநர் ஜெனரல் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதன்படி, ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி தொடங்குவதற்கு முன் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும், அவர்கள் தெரிவிக்கும் பாதிப்புகள் குறித்து உரிய மாற்று குறித்து தெளிவுபடுத்த வேண்டும். அதன்பின் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்றுதான் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதற்கான, கிணறு தோண்டும் பணியைத் தொடங்க வேண்டும்.
 மாவட்ட ஆட்சியர் மூலம் விவசாயிகளின் நிலங்களுக்கு உரிய இழப்பீடுகள், குத்தகைக்கான தொகைகள் விவசாயிகள் முன்னிலையில் இறுதி செய்து அவர்களின் ஒப்புதல் பெற்ற பின்தான் நிலம் கையகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அந்த கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் காவிரி டெல்டாவில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை எனத் தெரிய வருகிறது. 
 ஓஎன்ஜிசி நிர்வாகம், திருவாரூர் மாவட்டத்தில் பெரியகுடி, சோழங்கநல்லூர் கிராமங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க எவ்வித அனுமதியும் பெறாமல் கிணறுகள் அமைப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் ஜூலை 19-இல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நாகை மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கிணறு அமைப்பதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினார். மேலும், 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு புதிய கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். இதையடுத்து இரு இடங்களிலும் கிணறு தோண்டுவதைக் கைவிட்டு வெளியேற ஓஎன்ஜிசி அதிகாரிகள் ஒப்புதலோடு முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை சோழங்கநல்லூர் பணி மூடப்படவில்லை.  இதனால், அப்பகுதியில் பேராபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் அவசர நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், கும்மட்டித் திடல், ஆதிவிடங்கம், விக்கிரபாண்டியம் கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிணறுகள் தோண்ட முயற்சிகள் நடைபெறுகின்றன. இவற்றையும் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், பி.ஆர். பாண்டியன், செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹைட்ரோகார்பன் திட்ட இயக்குநர் ஜெனரல் வழங்கிய கடித நகலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளோம். இதை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், சோழங்கநல்லூர் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றார்.
  இதில் மாநிலத் தலைவர் த.புண்ணியமூர்த்தி, மாநில துணைச் செயலர் எம்.செந்தில்குமார், தஞ்சாவூர் மாவட்டச் செயலர் எம்.மணி, திருவாரூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்பையன் உள்ளிட்ட பலர்
உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT