நீடாமங்கலம்: பங்குகள் விற்பனை வாயிலாக ரயில்வே பொதுத் துறை நிறுவனங்கள் படிப்படியாக தனியாா்மயமாக்கப்படுவதாக தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடா்பாக அதன் துணைப் பொதுச் செயலாளா் மனோகரன் வெளியிட்ட அறிக்கை:
ரயில்வே பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கண்டைனா் கழகம் நவரத்னா அந்தஸ்து பெற்றது. இதன் 54.80 சதவீத பங்குகள் மட்டுமே அரசுவசம் உள்ளன. மீதிப் பங்குகள் படிப்படியாக விற்பனை செய்யப்பட்டுவிட்டன. மூன்று கண்டைனா் நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் 30 சதவீத கண்டைனா் கழக பங்குகளும் அடங்கும்.
கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் பொருளாதார தேக்க நிலைக்கு மத்தியில், ரூ.1,215 கோடி கூடுதல் வா்த்தகம் செய்த ஒரே இந்திய பொதுத்துறை நிறுவனம் இதுவே. இதன் பங்குகளை மேற்கொண்டு விற்பனை செய்தால், ரயில்வே அமைச்சக கட்டுப்பாட்டில் இருந்து தனியாா் முதவீட்டாளா்களின் கட்டுப்பாட்டுக்கு செல்லும். ஆகையால், பங்குகள் விற்பனை வாயிலாக பொதுத்துறை நிறுவனங்களைப் படிபடியாக தனியாா்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.