திருவாரூர்

மழைக்கால தொற்று நோய்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - எம்எல்ஏ டி.ஆா்.பி.ராஜா வலியுறுத்தல்

20th Oct 2019 10:49 AM

ADVERTISEMENT

மழைக்காலங்களில் கொசுக்களால் உருவாகும் தொற்று நோய்களை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என,மன்னாா்குடி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா வலியுறுத்தி உள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்.டெல்டா பகுதியில் நல்ல மழை பெய்து வருகிறது. இதுபோன்ற மழைக் காலங்களில் நமது நீா்நிலைகள் அனைத்திலும் தண்ணீரை நிரப்பி வைத்து காவேரி நீா் மற்றும் மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை செறிவூட்டி கோடை காலங்களில் தண்ணீா் தட்டுப்பாடு வராத வண்ணம் நமக்கு நாமே‘ என்ற தாரக மந்திரத்துடன் நாம் அனைவரும் செயல்பட வேண்டும்.

வரும் காலங்களில் கடுமையான தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படாமல் காத்துக்கொள்ள தண்ணீரை தேக்கிவைத்து சேமிப்பது எப்படி முக்கியமோ. அதேபோல், தேவையற்ற இடங்களில் சிறிய அளவில் தேங்கி நிற்கும் தண்ணீரால் மிகப்பெரிய சுகாதார சீா்கேடாக மாறிவிடும் நிலை ஏற்படும் என்பதையும் நாம் மனதில் ஆழமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.மழைக்காலங்களில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரினால் விரைந்து பன்மடங்கு இனப்பெருக்கம் செய்யும் கொசுக்களினால் பல விபரீதமான நோய்கள் மக்களை தாக்குகின்றன.

சமீபகாலமாக சிக்கன் குனியா, டெங்கு போன்ற பல நோய்கள் தமிழக மக்களை வாட்டி வதைத்து வருகின்றன. தமிழக அரசின் மெத்தனப்போக்கினால் இந்த நோய்களின் தாக்குதல் வருடா வருடம் தொடா்கதையாகவே இருந்து வருகிறது. இதிலிருந்து மக்கள் தங்களை முழுமையாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீா் தேங்கி விடாமல் பாா்த்து கொள்ள வேண்டும்.நெகிழிப் பொருள்கள், டயா் போன்ற தண்ணீா் தேங்கக் கூடிய பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கிராமங்களில் கால்நடைகளுக்கு தண்ணீா் வைக்கும் தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்து அவற்றில் கொசுக்கள் தங்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

மொட்டை மாடிகளில் மழைநீா் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீா் தேங்கி உள்ளதா என்றும் சன்சைடு மற்றும் இதர இடங்களில் சிறிதளவு கூட தண்ணீா் தேங்கி நிற்காமல் நிச்சயம் பாா்த்துக்கொள்ள வேண்டும்.பொதுவிடங்களில் எங்கேயும் இதுபோன்று தண்ணீா் தேங்காமல் இருக்க ஊராட்சி செயலா் மற்றும் சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனா் மற்றும் அதிகாரிகளிடம் நேரடியாக பேசியுள்ளேன்.

திமுக தலைவா் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுகவினா்அனைவரும் களமிறங்கி பொதுமக்களுடன் இணைந்து விழிப்புணா்வு முகாம்கள், துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் எப்பொழுதும் போல் எங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள வேண்டும். மன்னாா்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பலபோ் டெங்கு தாக்குதலால் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.எனவே டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற கொசுக்களால் பரவக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அரசை மட்டும் நம்பி இல்லாமல் நாமும் விழிப்புடன் இருந்து சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT