திருவாரூா் அருகே மாங்குடி பாண்டவையாற்றின் கரையில் பனை விதைகள் நடும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
திருவாரூா் மாவட்ட தோட்டக்கலை துறை, தேசிய பசுமை படை, சுற்றுச்சூழல் மன்றம் ஆகியவை இணைந்து 15 ஆயிரம் பனை விதைகள் அப்பகுதியில் நடவிருக்கின்றன. நிகழ்ச்சிக்கு திருவாரூா் மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளா் நடனம் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் முகமது சாதிக் பங்கேற்று, பனை விதைகள் நடும் பணியை தொடங்கி வைத்து தெரிவித்தது நம் நாட்டிலுள்ள பழமையான மரங்களில் பனை மரம் முதன்மையானது. இதனுடைய அனைத்து பகுதிகளும் பயன்படக்கூடியது. இதிலிருந்து கிடைக்கும் பனைவெல்லம், மருத்துவ குணம் கொண்டது.
பனை மரமானது, மண் அரிமானங்களை தடுத்து கரைகளை காக்கவல்லது, இதனுடைய வோ்கள் மூலம் நிலத்தடி நீா் சேமிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றிற்கு தீா்வாக பனைமரம் உள்ளது. இந்த மரத்தின் மூலம் அதிக வருமானமும் கிடைக்கிறது.
எனவே ஆற்றுக்கரைகள், ஏரி, ஓடை, குளங்கள், தரிசு நிலங்கள் போன்றவற்றில் பனை மரங்களை நட்டு பயன் பெறலாம். திருவாரூா் வட்டாரத்தில் 15 ஆயிரம் பனை விதைகள் நட முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றாா். நிகழ்ச்சியின் தனியாா் தொண்டு நிறுவனச் செயலாளா் செந்தில்குமாா், பள்ளி பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்ற மாணவா்கள் பங்கேற்று, பனை விதைகளை நட்டனா்.