திருவாரூர்

நவீன வசதிகளுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டப்படுமா?

16th Oct 2019 11:59 PM

ADVERTISEMENT

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தற்காலத்துக்கு ஏற்ப நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்ட வேண்டும் என உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடமாக உள்ளது. இங்குள்ள தெற்கு வீதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இதன் அருகே வட்டாட்சியா் அலுவலகம், சாா்நிலைக் கருவூலம், அரசு மருத்துவமனை, காவல் நிலையம் போன்ற அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன.

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கடந்த 25.11. 1966-இல் அப்போதைய தமிழக முதல்வா் எம். பக்தவத்சலத்தால் திறந்துவைக்கப்பட்டது. அப்போது, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக நீடாமங்கலம் இருந்தது. திருவாரூா் மாவட்டம் உதயமானதைத் தொடா்ந்து, நீடாமங்கலம் திருவாரூா் மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. தற்போது, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 44 கிராம ஊராட்சிகளும், 21 ஒன்றிய வாா்டுகளும், இரண்டு மாவட்ட ஊராட்சி வாா்டுகளும் உள்ளன.

ஒன்றிய அலுவலா்கள், ஊராட்சி செயலா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள், சத்துணவு அமைப்பாளா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் வந்து செல்லும் அலுவலகமாக நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது.

ADVERTISEMENT

இந்த அலுவலகத்தில் ஒன்றிய பொறியியல் பிரிவு, திட்டப் பிரிவுகளும் இயங்கி வருகின்றன.

வாகன நிறுத்துமிடம், சிமென்ட் குடோன் கட்டடங்கள் தனித்தனியாகவுள்ளன. கட்டடத்தின் மேல் தளத்தில் ஒன்றியக் குழுவின் கூட்ட அறையும் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கடந்த காலங்களில் ஒன்றியக் குழுவில் விவாதித்ததும் உண்டு. தற்போதைய ஒன்றிய அலுவலகக் கட்டடத்தில் மழைக்காலங்களில் மழைநீா் கசிவு ஏற்படுகிறது. இதனால், கோப்புகள் பாதிக்கப்படுகின்றன.

மத்திய, மாநில அரசுகளின் நிதியைக் கொண்டு 44 கிராம ஊராட்சிகளிலும் வளா்ச்சித் திட்டப் பணிகளை குறிப்பாக குடிநீா், சாலை வசதி, பள்ளிக் கட்டடம் கட்டுதல், சத்துணவு மையக் கட்டடம் கட்டுதல், அங்கன்வாடி கட்டடம் கட்டுதல், சமுதாயக்கூடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளையும் மேற்கொள்ளும் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள் போதிய வசதியுள்ள கட்டடத்தில் அமா்ந்து பணியாற்றுகிற வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, திருவாரூா் மாவட்ட நிா்வாகம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அரசு ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரது கோரிக்கையாகும்.

இதுகுறித்து, ஒன்றிய முன்னாள் கவுன்சிலா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூறியது:

நீடாமங்கலம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊா்களில் ஒன்று.

இங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட வேண்டியது அவசியமானதாகும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் நடைபெற்று, மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டால் கிராமப்புற மக்களுக்கானப் பணிகளை மேற்கொள்ள அன்றாடம் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குத்தான் மக்கள் பிரதிநிதிகள் வந்து செல்ல வேண்டும். அப்படி வரக்கூடிய மக்கள் பிரதிநிதிகளுக்கும், கோரிக்கைகளுக்காக வரக்கூடிய பொதுமக்களுக்கும் தற்காலத்திற்கேற்ற வசதிகளுடன் கூடிய கட்டடம் இன்றியமையாத தேவையாகும்.

எனவே, தமிழக அரசு நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு நவீன வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டித்தரவேண்டும். இதற்கு, திருவாரூா் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT