திருவாரூர்

மந்தகதியில் மன்னார்குடி பாமணி உர ஆலை: தமிழக அரசு கவனிக்குமா?

5th Oct 2019 10:46 AM | சிவா. சித்தார்த்தன்

ADVERTISEMENT

தமிழகத்திலேயே அரசின் சார்பில் கூட்டுறவுத் துறையின் மூலம் தொடங்கப்பட்ட முதல்  உர ஆலை (கலப்பு உரம் தயாரிப்பு) என பெயர் பெற்ற மன்னார்குடி பாமணி உர ஆலை, ரூ.1.50 கோடி நிதியில் புனரமைப்பு செய்யப்பட்ட போதிலும், நிர்வாகம் மற்றும் உற்பத்திப் பிரிவுக்கு என அதிகாரிகள் நியமிக்கப்படாததால், தொடர்ந்து மந்தகதியிலேயே இயங்கி வருகிறது.
  கடந்த 1970-ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் மன்னார்குடியைச் சேர்ந்த திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரான மன்னை ப. நாராயணசாமி, டான்பெட் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைவராக இருந்த காலத்தில், அப்போது தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதியிடம் கோரிக்கை வைத்ததையடுத்து, பாமணி கிராமத்தில் உர ஆலை ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டது. இதை அப்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சர் சி.பா.ஆதித்தனார் 11.4.1971-இல் திறந்துவைத்தார். 
   ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் முதல் தொழிற்சாலையாகவும், விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் இப்பகுதியில் விவசாயம் சார்ந்த இந்த ஆலையின் மூலம் நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றனர்.  மேலும், இங்கிருந்து உரம் வேறு ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டதால், மன்னார்குடியில் தனியார் லாரிகளின் எண்ணிக்கை அப்போதே நூற்றுக்கணக்கில் இருந்தது. மன்னார்குடியிலிருந்து 5 கிமீ  தூரத்தில் உள்ள பாமணியில் 15 ஏக்கர் பரப்பளவில் பாமணி உர ஆலை  அமைக்கப்பட்டு, பொது மேலாளர் (பொறியாளர்), உற்பத்தி மேலாளர், ஆலை இயக்குநர்கள், உதவி  இயக்குநர்கள், மின்சார பொறியாளர்கள் என 25-க்கும் மேற்பட்ட அலுவலர்கள், 150 நிரந்தரத் தொழிலாளர்கள், 100 சுமைதூக்கும் தொழிலாளர்கள் என 3 "ஷிப்ட்'களாக ஆலை செயல்பட்டு வந்தது.
 இந்த  ஆலையில் 17:17:17 (வேம்பு கலந்தது) கலப்பு உரம் மற்றும் தோட்டப் பயிர்கள், கீரை வகைகளுக்கு என  12: 6: 6 மற்றும் 4: 8: 12 ஆகிய கலப்பு உரங்களும் தயாரிக்கப்பட்டன. இதில், 17: 17: 17 மட்டும் ஆண்டுக்கு 25 ஆயிரம் டன் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டான்பெட் அலுவலகங்களுக்கும்  அனுப்பி வைக்கப்பட்டன. பிற 12: 6: 6 மற்றும் 4: 8: 12 ஆகிய கலப்பு உரங்கள் விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்பட்டன.
  இவ்வாறு சிறப்பாக செயல்பட்டு கலப்பு உரத்தைத் தயாரித்து வழங்கி வந்த பாமணி உர ஆலையின் இயந்திரங்கள், தனது ஆயுள் காலத்தையும் தாண்டி கூடுதல் ஆண்டுகள் செயல்பட்டதால், கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் இயந்திரங்கள் அடிக்கடி  பழுது அடைவதும், அதனை  சரி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது. மேலும்,  உதிரிபாகங்கள் கிடைக்காததால் உற்பத்தி குறைந்து ஆலை அடிக்கடி தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. மேலும் ஆலை  கட்டடங்களும் சேதமடையத் தொடங்கின. 
2010-க்கு பிறகு நிர்வாகம், உற்பத்தி, அலுவலகம், தொழிலாளர்கள் என அனைத்துப் பிரிவுகளிலும் பணியாற்றியவர்கள் பணி ஓய்வு பெற்றதையடுத்து அந்த இடத்திற்கு புதிதாக வேறு யாரையும்  நியமிக்காததுடன், தற்காலிக பணியாளர்களைக் கொண்டு ஆலை செயல்பட்டு வந்தததால் நாளொன்றுக்கு சராசரியாக வெறும்  30 டன் உரம் மட்டுமே உற்பத்தி செய்யும் மந்த நிலை ஏற்பட்டது. இந்நிலையில், பாமணி உர ஆலையை  மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யுமாறு மன்னார்குடி எம்எல்ஏ  டி.ஆர்.பி. ராஜா சட்டப்பேரவையில் குரல் எழுப்பியதன் பலனாக ஆலையைப் புனரமைக்க ரூ.1.50  கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணி அண்மையில் முடிவடைந்தது.
   ஆயினும் நிர்வாக, உற்பத்தி அதிகாரிகள் நியமிக்கப்படாத நிலையில், செப்டம்பர் 30-ஆம் தேதி, உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. தற்போது தலா ஓர் ஆலை  இயக்குநர், ஆலை உதவியாளர், அலுவலக உதவியாளர் என மூவரும், 14 ஆண்டுகளாக பணி நிரந்தரமாக்கப்படாமல்  இருக்கும் தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் 30 பேரும், சுமைதூக்கும் தொழிலாளர்கள் 20 பேர் என  சொற்ப எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் உள்ளனர்.  பாமணி உர ஆலையின் நிலை குறித்து இளநிலை உதவியாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற கோவி.அழகிரி கூறியதாவது: 
பாமணி உர ஆலை தொடங்கிய மூன்று  ஆண்டுகளுக்குப் பின் வேலைக்கு சேர்ந்தேன். ஒரு நாளில் 120 டன்  உற்பத்தி செய்தாலும், தேவை அதிகம் இருந்ததால் கூடுதலாக உற்பத்தி செய்ய முடியாத நிலை இருந்தது. வேம்பு  கலந்த கலப்பு உரம் பாமணி உரம் மட்டும்தான் என்பதுடன் இயற்கையானது, தனியார் நிறுவனத்தை விட விலை  குறைவாக இருந்தததால், விவசாயிகள் மிகவும் விரும்பி வாங்கினர். இடைப்பட்ட காலத்தில் கூட்டுறவு சங்கங்கள்  நலிவடைந்ததையடுத்து, தனியார் முகவர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் பாமணி உரம் விநியோகம் தடையின்றி  வழங்கப்பட்டது. இதில் போக்குவரத்து செலவு கூடுதலாகிறது எனவும் வாகனத்தின் வாடகையை உர ஆலை ஏற்க வேண்டும் எனவும் முகவர்கள் தெரிவித்ததை ஆலை நிர்வாகம் ஏற்காததால் முகவர்கள் பாமணி உரத்தைக் கொள்முதல் செய்வதை நிறுத்தினர்.
தற்போது ஆலை சீரமைக்கப்பட்டு உற்பத்தியை மீண்டும் தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், ஆலையைத்  திறம்பட இயக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் நிர்வாகம் மற்றும் உற்பத்தி பிரிவுக்கு உள்ள திறமையான அதிகாரிகளை நியமிக்க  வேண்டும் என்றார்.
  முன்னாள் ஆலை பொது மேலாளர் எஸ். சரவணன் கூறியது: 
 1971-ஆம்  ஆண்டு இந்தியா முழுதும் தொடங்கப்பட்ட 11 கலப்பு உரம் தயாரிக்கும் உர ஆலையில் இன்றுவரை உயிரோட்டத்துடன்  செயல்படுவது பாமணி ஆலை மட்டும்தான். தற்போது புதுப்பொலிவுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆலையின் கலப்பு உரங்கள், மீண்டும் தமிழகம் முழுவதும் கோலோச்சிட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப  வேண்டும். பாமணி உரம் வாங்கவும், விற்கவும் கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்கும் சலுகையில் பாதி அளவாவது தனியார் முகவர்களுக்கு அளித்தால் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும். இதனால் உற்பத்தி பெருகும். உர ஆலை மிக  சிறப்பாக செயல்படும். விவசாயிகளுக்கு நல்ல தரமான நியாயமான விலையில்  இயற்கை உரம் தட்டுப்பாடின்றி  கிடைக்கும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT