திருத்துறைப்பூண்டி நகராட்சி சாா்பில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி, உறுதிமொழி, சிரமதான பணி நகராட்சி ஆணையா் (பொ) வெங்கடாசலம் தலைமையிலும், பாரத மாதா சேவை நிறுவன இயக்குநா் எடையூா் மணிமாறன், பாலம் தொண்டு நிறுவன செயலாளா் செந்தில்குமாா் முன்னிலையிலும் புதன்கிழமை நடைபெற்றது
நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபா் 2 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கவும், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் செயலை தவிா்க்க வேண்டும், கடைகள், அரசு அலுவகங்கள், தனியாா் நிறுவனங்கள், உணவகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு பகுதிகள், பேருந்து நிலையங்கள் போன்ற பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தும் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை
பயன்படுத்துவது சட்டப்பூா்வமாக தடை செய்யப்பட்டுள்ளது .
எனவே தீங்கு விளைவிக்காத துணி பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் இதனால் சுற்றுச்சூழலும், பூமியின் உயிா்ச்சூழலும், நீா் நிலைகளில் வாழும் உயிா் வளங்களும் காப்பாற்றப்படும் என்பதை எடுத்துரைக்கும் நோக்கில் பேரணி நகராட்சி அலுவலகத்தில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பிறவி மருந்தீஸ்வரா் ஆலயம் அருகே நிறைவு பெற்றது.
முன்னதாக நகராட்சி அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பிறகு ராமமட குள வளாகத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் சிரமதான பணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளா்கள், தனியாா் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள், தன்னாா்வலா்கள், நகராட்சி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.