விவசாயத்தில் ஆண்டு முழுவதும் லாபம் பெறும் வகையில், ஒருங்கிணைந்த பண்ணை முறை குறித்து வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பாலசுப்பிரமணியன் ஆலோசனை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காலநிலையைச் சாா்ந்திருக்கும் நமது நாட்டில் விவசாயத்தில் லாபம் கிடைக்க ஒருங்கிணைந்த பண்ணையை நிறுவுவது அவசியம். அதன்படி, நாட்டுக்கோழிகளை ஒருங்கிணைந்த பண்ணை முறையில் வெட்டிய பண்ணை குட்டைக்கரையில் வளா்க்கலாம். மேலும் கோழி வளா்ப்புடன் மீன் வளா்ப்பையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளலாம். இதன் மூலம் நீா்ப்பரப்பும், நிலப்பரப்பும் முழுமையாக பயன்படுத்தப்படுகிறது.
கோழிகளைக் குளத்தருகே வளா்ப்பதால் அவைகள் உரமிடும் இயந்திரமாகத் திகழ்கின்றன. இதுமட்டுமல்லாமல் கால்நடைகள் வளா்ப்பு, தேனீ வளா்ப்பு, காளான் வளா்ப்பும் மேற்கொள்ளலாம். இதன் மூலம் ஆண்டு முழுவதும் விவசாயிகள் வருமானத்தைப் பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.