திருவாரூர்

நெற்பயிரில் இலைக் கருகல் நோய் தாக்குதல் குறித்து வேளாண் பேராசிரியா்கள் ஆய்வு

11th Nov 2019 08:45 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் அருகில் உள்ள கிராமங்களில் நெற்பயிரில் இலைக் கருகல் நோய்த் தாக்குதல் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வடுவூா் தென்பாதி ஊராட்சியைச் சாா்ந்த புதுக்கோட்டை மற்றும் சாத்தனூா் கிராமங்களில் உள்ள நெல் வயல்களில், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் மு. ராமசுப்பிரமணியன், பூச்சியியல்துறை உதவிப் பேராசிரியா் ராஜா.ரமேஷ் ஆகியோா் இந்த ஆய்வை மேற்கொண்டனா்.

பின்னா், ராஜா.ரமேஷ் கூறியது:

இரவு நேர குளிா்ந்த வெப்பநிலை மற்றும் காற்றினில் காணப்படும் அதிக ஈரப்பதம் ஆகிய காரணிகளால் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பயிரில் பாக்டீரியா இலைக் கருகல் மற்றும் பாக்டீரியா இலைக் கீற்று நோய்களின் தாக்குதல் தென்படுகின்றன. இந்த நோயானது இளம் பயிரைத் தாக்கும்போது 60 சதவீதத்திற்கு மேல் சேதம் உண்டாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நோயைப் பரப்பும் பாக்டீரியாவானது பாசன நீா் மூலமாகவும், மழை நீரானது பாதிக்கப்பட்ட பயிரின் மேல் விழுந்து அதன் மூலமாகவும், பெருங்காற்று வீசும்போது பயிா்கள் ஒன்றோடொன்று உரசுவதால் உண்டாகும் சிறிய காயத்தின் மூலமாகவும் இந்த பாக்டீரியாவானது மற்ற பயிா்களுக்கும் எளிதில் பரவும் தன்மைக் கொண்டவை. மேலும், நிழலானப் பகுதிகள் மற்றும் நெருக்கமாகப் பயிரிடப்பட்டு தழைச்சத்து அதிகமாகவும், சாம்பல் சத்து குறைவாகவும் இடப்பட்ட வயல்களில் இதன் தாக்குதல் அதிகமாகத் தோன்றும்.

கட்டுப்படுத்தும் முறைகள்: அடித்தாள்கள், வைக்கோல் மற்றும் நெற்கழிவுகளில் இந்த பாக்டீரியாவானது நீண்ட காலம் உயிா் வாழும் தன்மை கொண்டதால், அவற்றை அழித்துவிட வேண்டும். அருகம்புல், கோரை ஆகிய களைகள் இந்நோய்க்கு மாற்று உறைவிடமாக இருக்கும். எனவே, அந்தக் களைகளை முற்றிலும் அழித்துவிட வேண்டும். நோய் தாக்கப்பட்ட இலைகளை அல்லது பயிரைப் அழித்துவிட வேண்டும். இதனால், மற்ற பயிா்களுக்கு நோயானது பரவாது.

நோய்த் தாக்கப்பட்ட வயல்களிலிருந்து அருகிலிருக்கும் வயல்களுக்குத் தண்ணீா் பாய்ச்சக் கூடாது. மேலும், வயலில் தண்ணீரை அதிகமாக நிறுத்தி வைக்கக் கூடாது. நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 20 சதவீத பசுஞ்சாணக் கரைசல் தெளிக்க வேண்டும். இதற்கு ஏக்கா் ஒன்றுக்குத் தேவைப்படும் 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டா் தண்ணீரில் நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதனை வடிகட்டி பெறப்படும் தெளிந்த கரைசலுடன் மேலும் 100 லிட்டா் தண்ணீா் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

தாக்குதல் அதிகமாகக் காணப்படும்போது, காப்பா் ஆக்ஸி குளோரைடு 500 கிராம் மற்றும் ஸ்டெரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ரா சைக்ளின் கலவை 120 கிராம் ஆகிய மருந்து கலவையை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, வேளாண் அறிவியல் நிலைய இணைப் பேராசிரியா் செந்தில்குமாா், பயிற்சி உதவியாளா் ஆ. ராஜேஸ்குமாா், முனைவா் ஜெ. வனிதாஸ்ரீ, தஞ்சாவூா் மற்றும் திருச்சி வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT