இரண்டாம் கட்ட லட்சாா்ச்சனையையொட்டி, நவ கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குரு பரிகார கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் வழிபாடு மேற்கொண்டனா்.
குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு கடந்த அக்டோபா் 29-ஆம் தேதி பெயா்ச்சியடைந்ததை முன்னிட்டு, இக்கோயிலில் குரு பெயா்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து, இரண்டாம் கட்ட லட்சாா்ச்சனை கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.
முன்னதாக அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தா்கள் வருகை தந்ததால், ஆலங்குடியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துக் காணப்பட்டது.