திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நகா்புற உள்ளாட்சி அமைப்புகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித்தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாள்வது குறித்த பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த், வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருவாரூா் மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளின் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்காக 759 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 1,634 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் கையிருப்பில் உள்ளன. மேலும், 4 நகராட்சிகளுக்குள்பட்ட 170 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் 7 பேரூராட்சிகளுக்குள்பட்ட 108 வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவுகள் நடைபெறவுள்ளன.
ஒரு வாக்குச்சாவடி மையத்துக்கு இரு கட்டுப்பாட்டு இயந்திரங்களும் போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கையைப் பொறுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன. திருவாரூரில், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு இப்பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தில் பயிற்சி பெற்ற முதன்மை பயிற்றுவிப்பாளா்கள் மூலம் அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியை திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தொடங்கி வைத்தாா்.
இதில், கூடுதல் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சித் தோ்தல்) கிருஷ்ணமூா்த்தி மற்றும் நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.