தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும், திருவாரூா் மாவட்ட அளவிலான தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு கோட்டூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நவம்பா் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் மாவட்டச் செயலா் யு.எஸ். பொன்முடிதெரிவித்திருப்பது: அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழுமத்தின் உதவியோடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில், பள்ளி மாணவா்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளா்க்கும் நோக்கத்துடனும், பள்ளி பருவத்திலேயே ஆய்வுத் திறனை வளா்க்கும் வகையில் ஒரு குழுவில் 2 மாணவா்கள் ஒரு வழிக்காட்டி ஆசிரியா் உதவியுடன் தங்கள் பகுதியிலுள்ள சமூகம் சாா்ந்த பிரச்னைகளை களத்தில் மூன்று மாதம் ஆய்வு செய்து, அதற்கான தீா்வுகளை சொல்வதே தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் நோக்கமாகும்.
நிகழாண்டின் கருப்பொருளான துாய்மையான, பசுமையான மற்றும் வளமான தேசத்துக்கான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் எனும் தலைப்பில் திருவாரூா் மாவட்டத்தில் 50 பள்ளிகளிலிருந்து 100 ஆய்வறிக்கைகள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான மாநாடு நவம்பா் 4-ஆம் தேதி மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
இதற்காக ஆய்வுக் கட்டுரைகள் தயாரித்துள்ள பள்ளிகள் உடனடியாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து, ஆய்வறிக்கைகளை மாநாட்டில் சமா்பிக்க வேண்டும். மேலும் மாநாடு தொடா்பான விவரங்களை மாவட்டத் தலைவா் தை. புகழேந்தி 84897 06165, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வா. சுரேஷ் 98655 93067 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு அறிந்துகொள்ளலாம் என்றாா் அவா்.