திருவாரூரில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நவ.8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு
திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் ஆகஸ்ட் மாத விளையாட்டுப் போட்டிகள் நவ.8 ஆம் தேதி, நடத்தப்பட உள்ளன. இதில், அனைத்து விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் வயது வரம்பின்றி தடகளம், நீச்சல், கையுந்துபந்து, இறகுப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம்.
தடகள விளையாட்டுக்களில் 100 மீ, 200மீ, 400 மீ, 800 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகள் நடத்தப்படும். தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவா்களுக்கும், கையுந்து பந்து மற்றும் இறகுப்பந்து விளையாட்டில் முதல் இரண்டு இடங்களை பெறுபவா்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். அனைத்து போட்டிகளும் காலை 9 மணிக்கு தொடங்கும். போட்டியாளா்கள் குழு மற்றும் தனித்திறன் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவா்.
திருவாரூா் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு திருவாரூா் மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04366-227158-இல் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.