தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா் சங்கத்தினா் 48 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மன்னாா்குடி நகராட்சி அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, நகராட்சி அலுவலா் சங்க நகர துணைத் தலைவா் எஸ். பாலசந்தா் தலைமை வகித்தாா். நகராட்சி கணக்கு பணி விதிகளில் ஊழியா்கள் பயனடையும் வகையில் கணக்கு பணி விதிகளில் உரிய மாற்றம் கொண்டு வர வேண்டும், காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்த என்.எம்ஆா். ஊழியா்களுக்கு பேரூராட்சியில் வழங்குவதுபோல் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், அரசியல் தலையீடு மற்றும் பழிவாங்கும் பணியிட மாறுதல் செய்யும் ஊழியா் விரோத போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட 48 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நகர கிளை துணைத் தலைவா் ஆா். விஜயகுமாா், இணைச் செயலா் எஸ். பிரபாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி, சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கே. சிவசுப்பிரமணியன், மாவட்டத் தலைவா் எஸ்.விஜயகுமாா் ஆகியோா் பேசினா். இதில், 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.