திருவாரூர்

திருவாரூரில் இன்று மருத்துவக் கண்காட்சி தொடக்கம்

29th Jun 2019 09:15 AM

ADVERTISEMENT

திருவாரூரில் தினமணி சார்பில், "ஆரோக்கியமே ஆனந்தம்' எனும் இலவச மருத்துவக் கண்காட்சி மற்றும் சிகிச்சை முகாம் சனிக்கிழமை (ஜூன் 29) தொடங்குகிறது. இக்கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை  நடைபெறுகிறது. 
 தினமணி நாளிதழ் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த மருத்துவக் கண்காட்சியை நடத்துகின்றன. திருவாரூர் அருகே விளமல்- மன்னார்குடி சாலையில் உள்ள பொன்தமிழ் திருமண மண்டபத்தில் நடைபெறும் மருத்துவக் கண்காட்சியை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தொடங்கி வைக்கிறார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.கே. விஜயகுமார், தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி எஸ். ரமேஷ்பாபு, காரைக்கால் ஓஎன்ஜிசி நிர்வாக இயக்குநர் அனுராக் சர்மா, ஓஎன்ஜிசி முதன்மை பொது மேலாளர் ஏ. ரவிச்சந்திரன், துணைப் பொது மேலாளர் (மருத்துவம்) சதாசிவ் எஸ். ஷெனாய் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றுகின்றனர்.
இதையடுத்து, சிறப்பு அழைப்பாளர்கள் கண்காட்சியை பார்வையிடுகின்றனர்.  
இக்கண்காட்சியில், 27 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில், யோகா, சித்தா, கண், காது, தொண்டை, இதயம் தொடர்பான சிறப்பு மருத்துவர்களும், நிபுணர்களும் பங்கேற்று, இலவச ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் அளிக்கின்றனர். இதுதவிர, காப்பீட்டு நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்பதால், மருத்துவக் காப்பீடு, விபத்துக் காப்பீடு மற்றும் இழப்பீடு பெறுதல் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. கண்காட்சி மற்றும் இலவச சிகிச்சை முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. 
மேலும், சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு பட்டிமன்றப் பேச்சாளர் எஸ். மோகனசுந்தரம், "மருத்துவத்தை பொல்லாங்கு சொல்ல வேண்டாம்' என்ற தலைப்பிலும், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, "உடலினை உறுதி செய்' என்ற தலைப்பிலும் கருத்துரை 
வழங்குகின்றனர். 
இதேபோல், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மருத்துவக் கண்காட்சியில், முற்பகல் 11 மணிக்கு மதுரை முத்து குழுவினரின் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறுகிறது. பின்னர் நண்பகல்12 மணிக்கு மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டிகள் நடைபெறும். 3 முதல் 5- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு என்னும் தலைப்பிலும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆரோக்கியமான சுற்றுச்சூழல் என்னும் தலைப்பிலும், 9 முதல் 12- ஆம் வகுப்பு வரை ஆரோக்கிய வாழ்வு என்னும் தலைப்பிலும் மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
 இந்தக் கண்காட்சிக்கு காரைக்கால் ஓஎன்ஜிசி நிறுவனம், அனு மருத்துவமனை, நதி குடிநீர் நிறுவனம், ஹோட்டல் செல்வீஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஸ்பான்ஸர்களாக உதவி புரிகின்றனர்.
இரு நாள்களிலும் நடைபெறும் இந்த பிரமாண்ட கண்காட்சிக்கான ஏற்பாடுகளை நாகை மற்றும் திருச்சி பதிப்புகளின் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT