திருவாரூர்

"காவிரி நாள்' கடைப்பிடிக்க வேண்டும்: பெ. மணியரசன்

29th Jul 2019 07:40 AM

ADVERTISEMENT

காவிரியில் தமிழகத்துக்கான உரிமையைப் பெற ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகள் இணைந்து காவிரி நாள் என ஒரு தேதியை அறிவித்து மிகப்பெரிய அளவிலான அறவழிப் போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் கோரியுள்ளார்.
மன்னார்குடியில் சனிக்கிழமை மன்னையின் மைந்தர்கள் அமைப்பு சார்பில், தலைக்கட்டும் தலைமுறை எனும் தலைப்பில் கருத்தரங்கம், திறவுகோல் 2-ஆம் ஆண்டு மலர் வெளியீட்டு விழா, கஜா புயல் நிவாரணப் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு சிறப்பு செய்யும் விழா என முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு மேலும் அவர் பேசியது:  
தமிழகத்தில் அண்ணா ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்துக்கு திட்டங்களை செயல்படுத்தாமல் மத்திய அரசு புறக்கணிப்பதாக கூறி அரசின் சார்பில் தமிழ்நாட்டில் எழுச்சி நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதேபோல், காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் நிலை தொடர்வதை கண்டித்து, ஆளும் அதிமுக, எதிர்க் கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைந்து கன்னியாகுமரியிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை ஸ்தம்பித்து போகும் வகையில் காவிரி நாள் என ஒரு நாளை தேர்வு செய்து அறவழிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். 
ஒரே மாநிலமாக இருந்து வெவ்வேறு மாநிலமாக பிரிந்துள்ள தெலங்கானா, ஆந்திரத்தில் கோதவாரி பிரச்னை உருவெடுத்துள்ள நிலையில், காவிரி, கோதாவரி இணைப்பு எப்படி சாத்தியமாகும் ? காவிரி நதிநீர் பிரச்னையில் மத்திய அரசை குற்றம்சாட்டும் அதிமுக, திமுக பெயரளவுக்கு மட்டுமே கர்நாடக அரசை கண்டித்து வருகிறது. காவிரி நதிநீர் பங்கீட்டுக்கு எந்த அதிகாரம் இல்லாத பெயரளவுக்கு ஆணையம் இருப்பதால் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தமிழக தண்ணீர் உரிமையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் அது ஒரு ஜீவாதாரப் பிரச்னையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் மணியரசன். 
மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் தலைவர் ராமு தலைமையில் நடைபெற்ற விழாவை மீத்தேன் திட்டம் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இலரா. பாரதிச்செல்வன் தொடங்கி வைத்தார். 
கஜாபுயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய தன்னார்வலர்களை பாராட்டி சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினார். திறவுகோல் 2-ஆம் ஆண்டு மலரை முன்னாள் வங்கித் துறை அலுவலர் கவிஞர் இலரா. மோகன் வெளியிட்டு பேசினார்.
விழாவையொட்டி, ஒளிமயம் சிலம்பம்  மற்றும்  விளையாட்டு அகாதெமியின் விளையாட்டு நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. இதில், மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் பொருளாளர் பாலாஜி, ஒருங்கிணைப்பாளர் செந்தில்பாலாஜி, தமிழர் தேசிய முன்னணி மாவட்ட இளைஞரணி செயலர் ராஜராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT