ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் கூறியது: ஹைட்ரோகார்பன் திட்டத்தால் காவிரி மண்டலம் பாலைவனமாக மாறும். இதுகுறித்து, அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. சட்டப் பேரவையில் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு , அனுமதி இல்லை, மீறி பணிகள் நடந்தால் குற்ற வழக்கு தொடர்வோம் என்று அறிவித்தார்.
காவிரி டெல்டா பகுதிகளில் தொடக்கப் பணிகள் நடந்து கொண்டுதான் உள்ளது. அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்வதற்கு பதிலாக, திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்கள் மீது அரசும் காவல் துறையும் வழக்குத் தொடுத்து வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று புதுவை சட்டப் பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியும் உள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் வே. நாராயணசாமி தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ராணுவத்தையே அனுப்பினாலும் அதை உறுதியுடன் எதிர்க்க தயாராக உள்ளோம் என்றும் அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநில முதல்வரின் நடவடிக்கை செயல்பாடு போல் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும் செயல்படவேண்டும். எப்படிபட்ட சூழ்நிலையிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றார் அவர்.