திருவாரூர் அருகே வரதட்சிணை கொடுமையால் பெண் தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவாரூர் அருகேயுள்ள மருதப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் நகைக் கடை உரிமையாளர் அருண் (33). இவரது மனைவி மைதிலி (29). இவர்களுக்கு 2 அரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது, மைதிலி தரப்பில் 50 பவுன் நகை, பல லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டதாம். இதற்கிடையில், மேலும் வரதட்சணை கேட்டு, அருணின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் 2 நாள்களுக்கு முன், அருண் தனக்கு கார் வேண்டுமென மைதிலியிடம் தெரிவித்தாராம். காரையும் வாங்கித் தருவதாக, மைதிலி குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை, மைதிலி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டாராம்.
அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு போலீஸாரிடம் மைதிலி தெரிவிக்கையில், தன்னிடம் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து
வருகின்றனர்.