திருவாரூர்

வடுவூர் உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா காண்பது எப்போது? எதிர்பார்ப்பில்  விளையாட்டு  வீரர்கள்

27th Jul 2019 07:54 AM

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள வடுவூர் உள் விளையாட்டு அரங்கம் விரைவில் திறப்பு விழா காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
சர்வதேச, தேசிய, மாநில அளவில் கபடி, வாலிபால், தொடர் ஓட்டம், கராத்தே என பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்று தமிழகத்துக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் வகையில் வீரர்கள், வீராங்கனைகளைத் தந்து வருகிற ஊர் வடுவூர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது வடுவூர்.
வடுவூரில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின், விளையாட்டு ஆர்வலர்களின் நீண்டகாலத் திட்டமாகும். இந்த திட்டத்துக்காக வடுவூர் வி.என். ராமசாமி அய்யங்கார் குடும்பம் மற்றும் 5 விவசாயிகள் சேர்ந்து தங்களுக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர்.
கடந்த, 2013 -ஆம் ஆண்டு மத்திய ரயில்வே நிலைக்குழுத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர். பாலுவை வடுவூர் விளையாட்டு அகாதெமியினர் மற்றும் பொதுமக்கள் சந்தித்து, வடுவூரில் விளையாட்டு அரங்கம் அமைக்க மத்தியஅரசிடம் அனுமதியும், நிதியும் பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
இதையடுத்து, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தில் அந்த மனுவை அளித்து தொடர் நடவடிக்கை மேற்கொண்டார் டி.ஆர். பாலு.
இதைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே முதல் முறையாக கிராமப் பகுதிக்கென உள் விளையாட்டு அரங்கம் அமைக்க ஒப்புதல் அளித்து, ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு.
இதையடுத்து, சுமார் 2,750 சதுரமீட்டரில் (அதாவது 60 மீட்டர் நீளம், 40 மீட்டர் அகலம்) உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கபடி, வாலிபால், கூடைப்பந்து, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், சிலம்பம், கராத்தே, சதுரங்கம், யோகா உள்பட பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கவும், போட்டிகள் நடத்தும் வகையிலும் இந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகளை ஒரே நேரத்தில் 1,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் அலுவலகத்துக்கும், சிறப்பு விருந்தினர், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்கவும், உடை மாற்றவும், தனித் தனி அறைகள், கழிவறைகள், குளியலறைகள், உடற்பயிற்சி கூடம், நடைப்பயிற்சி பாதை என அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஓராண்டாக தரைத்தளம், மின் விளக்கு அமைக்க ரூ. 2 கோடி நிதி கூடுதலாக தேவைப்பட்டதையடுத்து, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேபிள் உட் என்ற மரக் கட்டையால் சர்வதேச தரம் வாய்ந்த தரைத் தளம் அமைத்தல், உயர் தொழில்நுட்ப மின்விளக்கு பொருத்துதல் போன்ற அத்தியாவசியப் பணிகள் நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
உள் விளையாட்டு அரங்கப் பணி தாமதப்பட்டு வருவது குறித்த தகவலறிந்த மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, கெயில் நிறுவனத்திடமிருந்து சமூக நல நிதியிலிருந்து ரூ. 39 லட்சம் நிதியைப் பெற்று தந்ததையடுத்து, அந்த நிதியைப் பயன்படுத்தி உள் விளையாட்டு அரங்கத்துக்கு உயர் தொழில்நுட்ப மின்விளக்கு பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு அண்மையில் நிறைவு பெற்றது.
சீன இறக்குமதி மேபிள் உட் மரத்தில் தரைத் தளம் அமைக்க ரூ. 1.50 கோடி தேவைப்படுவதால், அதற்குப் பதிலாக தேக்கு மரத்தில் தரைத்தளம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு, அதற்குத் தேவையான தொகையை நன்கொடையாளர்கள் அல்லது சட்டப்பேரவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்துதான் பெற முடியும் என்ற நிலை உள்ளது.
இதையடுத்து, தஞ்சை மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கத்தை சந்தித்து, வடுவூர் விளையாட்டு அகாதெமியினர் கோரிக்கை மனு அளித்தனர். இதை பரிசீலனை செய்து, தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து தருவதாக எம்பி எஸ்.எஸ். பழநிமாணிக்கம் ஒப்புதல் அளித்திருப்பதாக தெரியவருகிறது.
இகுகுறித்து வடுவூர் விளையாட்டு அகாதெமியின் செயலர் ஆர். சாமிநாதன் கூறியது: மத்திய அரசு ரூ. 6 கோடி நிதி வழங்கியது. இந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், மேலும் நிதி தேவைப்பட்டதையடுத்து, மத்திய விளையாட்டு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு நிதிப் பற்றாக்குறை குறித்து தெரிவிக்கப்பட்டது. உள் விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ. 6 கோடி மட்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இப்பணிக்கு என கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய இயலாது என தெரிவித்துவிட்டனர். கூடுதல் நிதியாக ரூ. 2 கோடி தேவைப்பட்டதால் அதை திரட்ட முடியாமல், கடந்த ஓராண்டுக்கு மேலாக பணி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தொகுதி எம்எல்ஏ ராஜாவின் முயற்சியில் கிடைத்த ரூ. 39 லட்சம் நிதியில் உயர் மின் விளக்கு வசதி செய்து முடிக்கப்பட்டது. இதில் முக்கியப் பணியான தரைத்தளம் அமைக்கத்தான் தேவையான நிதியைப் பெறுவதில் பெரும் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. வடுவூர் பொதுமக்கள், விளையாட்டு வீரர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், தஞ்சை தொகுதி எம்பி எஸ்.எஸ். பழநிமாணிக்கம் உள் விளையாட்டு அரங்கம் முழுமைப்பெற நிதி ஒதுக்கீடு செய்ய அறிவித்திருப்பது உள்விளையாட்டு அரங்க பணி மட்டுமல்லாது, எங்களின் மனமும் நிறைவு பெறுகிறது என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT