திருவாரூர்

"நாட்டின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு இன்றியமையாதது'

27th Jul 2019 07:47 AM

ADVERTISEMENT

நாட்டின் வளர்ச்சியில் மாணவர்களுக்கு பெரும் பங்கு உள்ளது என்று திருவாரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் டி. பாரதநேரு பேசினார். 
திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற வழிபாட்டுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசியது: தற்போதைய காலகட்டத்தில், மாணவர்கள் போதைப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகும் நிலை பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. 
இதுபோன்ற சமூக விரோதச்  செயல்களில் ஈடுபட்டால் காவல் துறையின் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாகி, வாழ்க்கை வீணாகி விடும் என்பதை மாணவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
குற்றச் செயல்கள் நடைபெறுவதை மாணவர்கள் காண நேர்ந்தால், அப்படியே சென்று விடக்கூடாது. உடனடியாக 100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். 
தந்தையுடன் இருசக்கர வாகனங்களில் செல்ல நேர்ந்தால், தலைக்கவசத்தின் அவசியத்தை தந்தைக்கு எடுத்துக் கூறி, தலைக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் மாணவர்களுக்கு பெரும் பங்கு உள்ளது. மாணவர்கள் பொறுப்புணர்வோடு, பெற்றோருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அத்துடன் கடமையுணர்வோடு படித்து முன்னேற்றமடைந்து நாட்டையும் முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என்றார் அவர். இதில், வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எஸ்.எஸ். தியாகபாரி, கல்விக்குழு உறுப்பினர் கே.ஜி. சீலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT