பள்ளியின் முன்னேற்றம் சார்ந்தே தலைமையாசிரியர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (மாநில கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) வி. ஜெயக்குமார் தெரிவித்தார்.
திருவாரூர் அருகேயுள்ள மஞ்சக்குடியில், வியாழக்கிழமை நடைபெற்ற கல்வி மேலாண்மை மற்றும் தகவல் மையத்தின் (இஎம்ஐஎஸ்) செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவர் பேசியது:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இஎம்ஐஎஸ் இணையத்தில் மாணவர்களின், ஆசிரியர்களின் அனைத்து விவரங்கள், பள்ளிகளின் கட்டட வசதி போன்ற அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒரு பள்ளியில் ஒரு மாணவரின் விவரம் பதிவேற்றம் செய்யவில்லை என்றாலும் நமது மாவட்டத்தின் பணி பாதிப்படையும். எனவே, அனைவரும், தங்களது பணியை சரியாக செய்ய வேண்டும். திருவாரூர் மாவட்டம் தேர்வு முடிவுகளில் 30-ஆவது இடத்தில் உள்ளது கவலையளிக்கிறது. தொடக்கப் பள்ளியின் கல்வித்தரம் பின்தங்கிய நிலையில் உள்ளது. மாணவர்களின் அடிப்படைத் திறன் வளர்க்க வேண்டும்.
தலைமையாசிரியர்களுக்கு பள்ளிகளில் போதுமான அளவில் ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளனர். எனவே, பள்ளியில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். முதல் பத்து இடங்களுக்குள் இடம்பெற, ஒவ்வொரு தலைமையாசிரியரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு மாணவன் பள்ளிக்கு நேரம் தவறி வந்தாலோ அல்லது தலை முடி ஒழுங்காக வெட்டவில்லை என்றாலோ, பள்ளிக்கு தொடர்ந்து வராமல் இருந்தாலோ தலைமையாசிரியர் தான் சரி செய்ய வேண்டும். மாவட்ட முன்னேற்றத்திற்கு அதிக ஒத்துழைப்பு தலைமையாசிரியர்கள் தர வேண்டும். பள்ளி முன்னேற்றத்துக்கு விதிமுறைகள் உருவாக்கி அதை பின்பற்ற வேண்டும். பள்ளி முன்னேற்றம் சார்ந்தே தலைமையாசிரியர்களின் செயல்கள் இருக்க வேண்டும்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எங்கள் ஆசிரியர்களுக்கு உண்டு என மாணவர்கள் நினைக்கும் அளவுக்கு ஆசிரியர்களின் செயல்கள் இருக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதிச் செய்தால் தான் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிக அளவில் நடைபெறும் என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆ. தியாகராஜன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சிவசுப்ரமணியன், மாவட்டக் கல்வி அலுவலர் மு. இராமன், மன்னார்குடி மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) ரா. மணிவண்ணன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) தெ. பாஸ்கரன், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) ச.ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.